Thursday, November 19, 2009

சடலத்தின் பெற்றோர்

விமானம் தரையிறங்கும் போது அதிகாலை நான்கு மணி. விக்னேஷ் விமான நிலையத்திற்கு வந்திருந்தான். வழக்கமான நலம் விசாரிப்புகளுக்குப் பின் எங்கள் அதகளத்தை ஆரம்பித்தோம். "பார்க்றதுக்கு பளபளன்னு இருந்தாலும் மழைன்னு வந்துட்டா எல்லா ரோடும் பல்லிளிச்சிடுது". "அது எப்படிடா இது ரோடுன்னு கூசாம சொல்றே. உங்கப்பா PWDல வேல பார்க்கிறாருன்னா? சரி அவங்களும் என்னதான் பண்ண முடியும்? அவங்களும் நம்ம மக்கள் மாதிரியே இவங்களாவது ஒழுங்கா பண்ண மாட்டங்களான்னு நம்பி பொறுப்ப ஒப்படைக்கிறாங்க. அரசியல்வாதிங்க ஏமாத்தற மாதிரியே காண்ட்ராக்ட் எடுக்றவனும் எமாத்திர்றானுங்க. அட்லீஸ்ட் முன்னவங்க ஒரு ஓட்டுக்கு ஐயாயிரம் கொடுக்ரானுங்க. இவனுங்க கொடுத்தாலும் உங்கப்பா வாங்கிக்கவும் மாட்டாரு." "போதும்டா நிறுத்து. கால் வருது என்னன்னு பாரு"

"சிவா.. பிரயாணமெல்லாம் சௌர்யமா இருந்ததா? பஸ்ல தானே வர்றே. வந்துட்டேன்னு போன் பண்ணா என்னவாம். SMS அனுப்றான்". "இல்லமா. விக்கி கார்ல வர்றேன்". "சரிதான். வர்றதே ஆறு மாசத்துக்கு ஒரு தடவ நாலு நாளைக்கு. அதிலும் மூணு நாள் அவன் வீட்ல தான் கிடப்ப. இப்போ போறதே அவன் வீட்டுக்கா? இன்னிக்கு தீவாளி டா". "இல்லம்மா வீட்டுக்குத் தான் வர்றேன். ஆரம்பிச்சுடாதே". "டேய் வச்சிடாதே. போட்டோ பார்த்தியா? சென்னைல தான் வேல பார்க்கிறா. வசந்தி . எனக்கு பிடிச்சிருக்கு. முடிச்சிரலாமா? .." "அப்றமா பேசுவோம்மா" "எப்போ பார்த்தாலும் அப்புறம் அப்புறம். அப்படி என்ன தல போற காரியமோ". ஒரு வழியாக வைத்து விட்டாள். அப்பா என்ன செய்து கொண்டிருப்பார்?

"என்னடா தீவாளி எல்லாம் எப்படி போகுது. அடுத்த வருஷம் தல தீபவளிங்க்ரதால சிறப்பா இருக்குமே". "அதுக்கு என்ன அது பாட்டு போகுது". மழை வலுத்தது. "வண்டிய நிறுத்து". சற்று தொலைவில் .. மின் கசிவின் காரணமாக ஏற்பட்ட தீப்பொறி அருகில் உள்ள குடிசையில் பற்றியது. என் செல்லில் "மீட்பு பணிகளா? இங்கே காந்திநகர் முருகன் கோயிலுக்கு பக்கத்தில தீ புடிச்சிருக்கு.. சீக்ரம் வரீங்களா?....."
-------------------------------------------------------------------------------------------------
சரியாக ஒரு மணி நேரம் முடிந்து விட்டிருந்தது. கால் மணி நேரத்திற்கு முன் மீட்பு பணியினர் வந்து சேர்ந்து இருந்தனர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து மேலும் உதவிக்காக அலுவலகத்தில் மன்றாடிக் கொண்டிருந்தனர். நிலைமை மோசமாகத் தான் இருந்தது. அந்த தற்காலிக குடிசையை வெடிகள் வைக்கும் குடோனாக வைத்திருந்திருக்கின்றனர். எரிபொருளின் வினையூக்கதால் எதிர்பார்த்ததை விட அதிகமான இழப்பு ஏற்பட்டு இருந்தது. செய்தி அறிந்து மீடியாவை சேர்ந்த பல நிருபர்களும், புகைப்படக் கலைஞர்களும் குவிந்திருந்தனர்.

இது வரை அதிர்ச்சியில் இருந்து மீளாத நாங்கள், தற்போது கொஞ்சம் துணிச்சல் பெற்று சம்பவ இடத்தை பார்வையிடத் தொடங்கினோம். கொஞ்சம் தள்ளி இருந்த வீட்டில் நெருப்பு அணைக்கப் பட்டு மீட்பு பணியினர் உள்ளே நுழைந்து இருந்தனர். வீட்டின் வெளியே முப்பதுகளின் தொடக்கத்தில் இருந்த ஒருவர் இருந்து அழுது கொண்டு இருந்தார். விசாரித்ததில் அவர் இரு மகன்களும், மனைவியும் உள்ளே மாட்டிக் கொண்டார்கள் என்றும் இவர் எவ்வளவோ முயன்றும் அவர்களை வெளியேற்ற முடியவில்லை என்றும் அழுதார். சிறிது நேரத்தில் கண்கள் பிதுங்கியபடி, நெருப்பின் சூட்டுக்கு கொஞ்சமும் குறையாத சூடான இளம் இரத்தம் கொப்புளித்தப்படி ஒரு சிறுவனை வெளியே கொண்டு வந்து கொண்டு இருந்தனர். என்னையும் மீறி ஒரு சக்தி என்னை அவனை நோக்கி இழுத்தது. நிலைமையின் தீவிரம் உணர்ந்து அவன் தந்தை என்னை இழுத்துப் பிடித்துக்கொண்டார்.

அவனை ஆம்புலன்சில் ஏற்றிய பிறகு, சாஸில் தோய்த்த சிக்கன் போல் பாதி வெந்தும் வேகாததுமாய் இரத்தத்தில் ஊறிய ஒரு பெண்ணை எடுத்து வந்தார்கள். போகும்போது தன் கணவனைக் கண்ட அந்தப் பெண் எதுவுமே நடக்காதது போல் ஓடி வந்து அவர் காலடியில் அமர்ந்து கொண்டாள். "என்னங்க நம்ம பிள்ளைகள பார்த்தீங்களா?". "எல்லாம் கடவுள் பார்த்துப்பார்" என்றபடி அப்பெண்ணை சமாதானம் செய்ய ஆரம்பித்து இருந்தார். அவருக்கு இனி என் சமாதானம் தேவை இல்லை என்பதால் இருவரும் அங்கிருந்து கிளம்பி அடுத்த வீட்டுக்கு சென்றோம்.

"இன்று அதிகாலை ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக ஏற்பட்ட விபத்தில் இருபதுக்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப் படுகிறது. சம்பவ இடத்தில் இருந்து சாதனா" தொகுப்பாளினி(!?) பொரிந்து முடித்திருந்தாள். புகைப்படக் கலைஞர் பிணங்களின் அழகை படமாக்கிக் கொண்டிருந்தார். விபத்தில் இருந்து தப்பியவர்களின் பேட்டி, விபத்தின் காரணம் என பல விஷயங்களை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தனர்.

அருகே தனியே அமர்ந்து அழுது கொண்டிருந்த பெண்மணி "சாவை படம்புடிச்சு பொழப்பு நடத்துறீங்களே துப்பு கெட்ட பயலுவளா" என்று வசைமொழி கூறிக் கொண்டிருந்தாள். அவள் பேச்சை கண்டு கொள்ளாமல் ஒருவன் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தான். நாங்கள் அவள் அருகில் போனோம். "என்னம்மா ஏன் இந்த கோபம்?" என்றேன். "பின்ன என்ன தம்பி. எத்தன உயிரு துடிச்சிட்டு இருக்கு, அதக் காப்பாத்தாம படம் புடிச்சிட்டு?". "இவங்க என்ன பண்ண முடியும் இவங்க என்ன டாக்டரா?". "ஒரே ஒரு ஆம்புலன்சு தான் இருக்கு இவனுங்க வண்டிய கொடுத்தா என்னவாம். இங்க பாரு என்புள்ள துடிச்சிட்டு இருக்கு. அங்க நின்னு பேட்டி கொடுத்துட்டு இருக்கான் என் தம்பி. உறவு எல்லாம் சும்மா தம்பி".

"அந்தம்மா சொல்றதெல்லாம் சரிதான். உறவுகள் என்று எதுவுமே இல்ல. இததான் பகவத் கீதையும் சொல்லுது. ஆன்மாவுக்கு என்று உறவுகள் இல்லை".
"உறவுகள் இல்லைன்னு சொல்ற அதே அம்மாதான் தன் பிள்ள உயிரை காப்பாற்ற தன்னால முடியாத இந்த நிலையிலும் போராட்றா. இப்போ நீ சொன்ன இந்த வாக்கியத்தை அதோ அங்கே நின்னு அழறாங்களே அவங்கட்ட சொல்லு பாப்போம்". எப்பொழுதும் நான் பேசுவதுக்கு மறு மொழி கூட கூறாத விக்கி இந்த முறை என்னை வென்றிருந்தான்.

அவன் காட்டிய திசையில் ஒரு கார் எரிந்து கொண்டு இருந்தது. காரில் இரு பிணங்கள் கருகியபடி இருந்தன. ஒரு பிணம் செல்லில் பேசியபடியே இறந்திருந்தது. அதன் அருகில் என் சடலத்தின் பெற்றோர் நின்று அழுது கொண்டிருந்தனர்.