Wednesday, February 17, 2010

யாருக்கு உங்கள் வாக்கு?

1969 ஆம் வருடம். நவீன அரசியல் 'தந்திரங்கள்' எதுவும் பெருமளவில் நடைமுறையில் இல்லாத காலம். நான் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பட்டம் பெற்று உமையாளை மணந்து நான்கு வருடங்கள் ஆகி இருந்தது. உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப் பட்டிருந்தது. எங்கள் வீடு இருக்கும் ஐந்தாம் வார்டுக்கு ஆளுங்கட்சி சார்பில் பெருங்குளத்துக்காரர் கைலாசம் செட்டியாரும், வன்னிக்கோன் மு.மெ. வள்ளியப்பன் செட்டியாரும் மனு தாக்கல் செய்து இருந்தார்கள். இருவருமே என் அப்பாவுக்கு நன்கு பரிச்சயமானவர்கள், என் தந்தையின் மறைவுக்குப் பிறகு எங்கள் குடும்பத்துக்கு ஆதரவாக இருந்தவர்கள். இருவரும் எங்கள் வீட்டுக்கு வந்து வாக்கு கேட்ட போது என்ன செய்ய என்று நான் கையைப் பிசைந்தவாறு நின்ற போது, அம்மா தான் இருவரிடமும் எங்கள் வாக்கு அவர்களுக்குத்தான் என்று கூறி விட்டார். 'ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கு போட்டு விட்டால் ஆச்சு' என்று சுலபமான தீர்வை சொல்லிவிட்டார். எனக்கு அதில் உடன்பாடு இல்லை, இருவரில் எவர் தகுந்தவர் என்று விசாரித்து அவருக்கு வாக்களிப்பது என்று முடிவு செய்தேன். விசாரித்ததில் 'இருவருமே தகுதியானவர்' என்று புரிந்தாலும், 'நல்லவர் தாமா?' என்பதில் சிக்கல் எழுந்தது. அந்த சில விஷயங்களைக் கேள்வி பட்டதும் இருவருக்கும் வாக்களிக்க வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன். அதற்காக வெற்றி பெரும் வாய்ப்பே இல்லாத ஒருவருக்கு வாக்களித்து வாக்கை வீணாக்கவும் விரும்பவில்லை. என்ன செய்யலாம் என்று விசாரித்த போது பலரிடம் இருந்தும் பல விதமான யோசனைகள் வந்தது "எல்லாருக்கும் குத்தி விடுங்கள், யாருக்குமே குத்த விருப்பமில்லை என்றால் எதையுமே குத்தாமல் வெறும் சீட்டை மடித்து உள்ளே போட்டு விடுங்கள், அதுவும் இல்லை என்றால் சீட்டை மடித்து சொக்காயில் வைத்துக்கொண்டு எதுவுமே தெரியாதது போல் வந்து விடுங்கள்" இப்படி. 'இந்த முறை வாக்களிக்க விருப்பமில்லை அடுத்த முறை நல்ல வேட்பாளர்களை நிறுத்தினால் வாக்களிக்க விருப்பம்' என்று நச்சென்று தேர்தல் ஆணையத்திற்கு உரைக்கும் படி சொல்ல வேண்டும் என்று விரும்பினேன். யாரிடமும் இதற்க்கான தீர்வு இல்லை. மேலும் இந்த முடிவு "பிரச்னையை வளர்க்கும், ஏன் யாருக்கும்மில்லாத அக்கறை உனக்கு, சிறு பிள்ளைத்தனம்" எனப் பல வாய்க்கும் அவலாகியது.

பல வித கோலாகலங்களுக்கு இடையில் எதிர்பார்த்த வாக்களிக்கும் நாள் வந்தது. இப்பொழுது வாக்குப்பதிவு செய்யும் இயந்திரங்கள் வந்த பின் தான் 49-0 பற்றி பரவலாக பேச்சு அடிபடுகிறது. ஆனால் அந்த சட்டம் 1961 ஆம் வருடத்தில் இருந்தே இருந்து வருகிறது, இதைப் பற்றி பள்ளி நண்பன் (அவனும் இதற்கு ஒப்பவில்லை) ஒருவனிடம் இருந்து தெரிந்து கொண்டு பாரத்தையும் வாங்கி நிரப்பிக் கொடுத்துவிட்டேன். அதற்குப் பின் தான் எல்லா சம்பவங்களும் ஒன்றன் பின் ஒன்றாய் அரங்கேறின. வாக்குச்சாவடியில் அமர்ந்திருக்கும் கட்சி முகவரின் முறைப்பில் இருந்து, மறு நாள் காலை செய்தித்தாள் முதற்பக்கம் வரை எல்லாமே எனக்கு எதிராகவே இருந்தது. நான் எந்த பாவமும் செய்யவில்லை என்பதை யாரும் புரிந்து கொள்ளத் தயாரில்லை, கைலாசம் செட்டியார் வெற்றி பெற்ற செய்தியை விட நான் வாக்களிக்க மறுத்ததை பெரிய செய்தியாக வெளியிட்டன பத்திரிக்கைகள். என்னைப் பற்றி புறம் பேசுவது அதிகமாகியது, அதிகம் பாதிக்கப் பட்டது உமையாள் தான் ஊர் அவளை "நாபத்தொன்பதாவது ஆச்சி" என்றே அழைக்க ஆரம்பித்து விட்டது. மாவட்டம் முழுவதும் தெரிந்த நபராகி விட்டேன். ஆனால் உண்மையான பிரச்சனை ஆரம்பமானது என்னவோ அடுத்து வந்த சட்ட சபைத் தேர்தலில் தான்.

வாக்கைக் காசுக்கு விற்கலாம் என்ற பொது அறிவு மக்களைச் சென்று சேராத காலமாதலால் வெறும் செட்டிநாட்டு பிரியாணிக்கும், சாராயத்திற்கும் விற்றுக்கொண்டு இருந்தனர். இந்த முறை நான் சந்தோசமாகவே இருந்தேன். ஏனெனில் சுதந்திர போராட்ட தியாகி வல்லம் அழகப்பச் செட்டியார், வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். எந்த ஒரு குற்றமும் இல்லாத உத்தமர் என்று பெயர் எடுத்தவர். அவருக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். ஏனெனில் அவரை எதிர்த்து போட்டியிட்டது உள்ளாட்சி தேர்தலில் தோல்வியுற்ற வள்ளியப்பன் தான், உள்ளாட்சி தேர்தலில் தோற்றாலும் தொகுதியில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு வேறு எவருக்கும் இல்லாததால் மேலிடம் அவரையே சட்ட சபைக்கு போட்டியிடச் செய்தது. தியாகி போட்டியிடுவதில் என்னைத் தவிர வேறு யாருக்குமே விருப்பம் இல்லை என்று தெரிந்தது. ஏன்? தியாகி நல்லவர் தான் என்றாலும், அவர் ஆட்சிக்கு வந்தால் கட்டுப்பாடு மாவட்டத் தலைவர் கணேசன் கையில் தான் இருக்கும் என்று ஊர் முழுவதும் தெரிந்து வைத்திருந்தது. இந்த தகவல் என்னைக் குழப்பியது. அப்பொழுது தான் வாக்கு சேகரிக்க தியாகி கட்சியை சேர்ந்தவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்தார்கள். ஒரு முடிவுக்கு வந்திருந்த நான் "இல்லை சார். தியாகிக்கு வாக்களிக்க விருப்பமில்லை. வள்ளியப்பன் மாமாவுக்கு தான் என் வோட்டு" என்றேன். "ஏன் சார்? ரொம்ப நல்லவர். நாட்டுக்காக குடும்பத்தைத் தொலைத்தவர். நம்ப சாதி வேற. நீங்க ஏன்னு சொல்லியே ஆகணும்" என்றான் கும்பலில் ஒருவன்.பதில் சொல்லாவிட்டால் போகமாட்டோம் என்று அடம்பிடித்தார்கள். நான் சும்மா இருந்திருக்கலாம் "நல்லவனா இருந்த போதுமா? திறமையும் வேணுமில்ல". அவ்வளவு தான். தியாகியைக் கொண்டு வந்து என் முன்னால் நிறுத்தி "இப்போ சொல்லுங்க, இவருக்கு ஏன் வாக்களிக்க விரும்பல?"என அதே கேள்வியைக் கேட்டார்கள். முன் ஒன்று பின் ஒன்று பேச என் மனம் ஒப்பாது அவர் மனம் புண் படும் என்று தெரிந்தும் "திறமை பத்தாது" என்றேன் உறுதியாக. தியாகி நிலை குலைந்து விட்டார்.

முன்னை விட இந்த முறை வசமாக மாட்டிக் கொண்டேன். "வாக்களிக்க விருப்பமில்லை" என்றதும் விலகி செல்லாமல் என்னைக் கட்டாயப்படுத்தி அந்த வார்த்தைகளை வரவழைத்தவர்களை யாரும் எதுவும் கேட்கவில்லை. இந்த முறை தேர்தலுக்கு முன்பே என் பெயர் தலைப்புச் செய்திகளில். பெரியவர்களை மதிக்கத் தெரியாதவன் என்று கெட்ட பெயர் ஊர் முழுவதும். இந்த முறை வெளியில் தலை காட்ட முடியவில்லை. நல்லவர்கள் முதல் கெட்டவர்கள் வரை அனைவருக்கும் கெட்டவன் ஆகிவிட்டேன். ஊர் முழுவதும் "மரியாதை தெரியாத மெய்யப்பன் ஒழிக" என்று கோஷங்கள். என்னைப் பழிப்பதற்கென்றே புதிய சங்கங்கள் தொடங்கப்பட்டன. நிலைமையின் தீவிரம் உணர்ந்து வாக்களிக்கக் கூட வீட்டில் இருந்து ஒருவரும் வெளியில் செல்லவில்லை. வாக்கு எண்ணும் நாளும் வந்தது. வள்ளியப்பன் தான் வெற்றி பெற்றிருந்தார். ஆனாலும் தியாகியின் கட்சி பெருவாரியான தொகுதிகளில் வென்று முதல்வர் பதவியையும் கைப்பற்றி இருந்தது. வெற்றியின் அதிகாரமும், தோல்வியின் குமுறலும் எனக்கு எதிராய் திரும்பி இருந்தது. அவர் தோற்றதற்கு நான் தான் காரணம் என்று பலரும் நம்பவைக்கப் பட்டிருந்தனர்.

முதல்வர் பதவி ஏற்ற நாளுக்கு அடுத்த நாள் "மெய்யப்பன் ஒழிக" கோஷம் காதுக்கு வெகு அருகில் கேட்டது. வாசலில் ஒரு பெரும் படை நின்றது. வீட்டுப் பெண்கள் நடுங்க ஆரம்பித்தனர். கதவு தட்டப் பட்டது. இந்தப் பெரும்படைக்கு தேக்கு கதவாய் இருந்தாலும் தாங்காது என்று முடிவு செய்து கதவைத் திறந்தேன். கூட்டத்தை அமைதி காக்கும் படி சைகை செய்து கணேசனும் ஒரு இளைஞனும் உள்ளே நுழைந்தனர். "டேய் நீ என்ன பெரிய கொம்பனா? படிச்சா என்ன வேணா பேசுவியா? உன் தாத்தா வயசு உள்ளவரை மரியாதை இல்லாம பேசுறியா? அவருக்கு திறமை இல்லன்னு சொல்ல நீ யார்ரா? உனக்கு நெறைய தெறம இருக்கா?" கத்திக் கொண்டே இருந்தான் அந்த இளைஞன். நான் வாயடைத்துப் போய் இருந்தேன். பயத்தை விட குற்ற உணர்வு தான் என் வாயை கட்டிப் போட்டிருந்தது. என்ன ஆனாலும் எதுவும் பேசக் கூடாது என்று முடிவுடன் பார்த்துக் கொண்டு இருந்தேன். "படிச்சவன். பொறுமையா இருப்பேன்னு தான் உன்னைக் கூட்டியாந்தேன். நீயுமா இப்படி. கொஞ்சம் வெளியே இருப்பா" என்று அவனையும் வெளியே அனுப்பிவிட்டு கணேசன் தொடர்ந்தார்.

"பையன் யார்னு தெருதா? ரெண்டு வாரத்துக்கு முன்னாடி IPS பாஸ் பண்ணினான்னு பேப்பர்ல வந்தானே பாலாஜி, நம்ப பய தான். படிச்சவனே இவ்வளவு கோவமா இருக்கும் போது மத்தவுக என்ன நினைப்பாக உங்களைப் பத்தி. அதான் உங்களைப் பார்த்து பேசிட்டு போலாம்னு வந்தேன். முதல்ல என்னை மன்னிச்சிருங்க. குழம்பாதீக. இன்னிக்கு கட்சி தமிழ்நாட்டில நல்ல நிலைல இருந்தாலும் நம்ம தொகுதியில நல்ல ஆளுக அமையல. தியாகியை நிறுத்தினா டெபொசிட் கூட கிடைக்காதுன்னு தெரியும். அதான் அன்னைக்கு நம்ம பயலுங்கள விட்டு வார்த்தையைப் புடுங்க சொன்னேன். நீங்க சொன்னத விளம்பரப் படுத்தி அனுதாப அலைகளைச் சேர்த்ததால தான் டெபொசிட் கிடைச்சது. இந்த டெபோசிட்ட உங்களுக்கே நஷ்ட ஈடா கொடுத்துர்றோம். அதோட இப்போவே எங்களோட வந்து தியாகியைப் பார்த்து ஒரு மாலையைப் போட்டு ஒரு மன்னிப்பு கேட்டுடுங்க. அதை நாளைய பேப்பர்ல போட்டுட்டா உங்க பிரச்சன எல்லாம் ஒழிஞ்சிடும். அப்புறம் பாராளுமன்ற தேர்தல்ல உங்களுக்கு சீட்டு வாங்கித் தர்றது என் பொறுப்பு. என்ன சொல்றீக?" என்று முடித்தார் கணேசன். வாசலில் "மெய்யப்பன் ஒழிக" கோஷம் விண்ணைப் பிளந்தது.