Friday, November 18, 2011

கரியன்- 2

கண்ணாடித்துரை என்றும் கண்ணடித்துரை என்றும் நெல்லை சீமை மக்களால் அழைக்கப்படும் அந்த ஆங்கிலேயர் ஒரு வணிகர். அங்கு விளையும் பணப்பயிர்கள் யாவற்றையும் குறைந்த விலையில் வாங்கி, தூத்துக்குடி துறைமுகம் வழியாக வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பெரும் லாபம் பார்த்து வந்தார். அவருக்கு ஏன் அந்த பெயர் என்று கேட்டால் பலரும் பல காரணங்கள் சொல்வார்கள்.
"அந்த ஆள், போட்ருக்குற கண்ணாடிக்காகத் தான்."
"கண்ணடிக்கிற நேரத்தில வியாபாரத்த முடிச்சிருவாரு. அதான்."
"அவரோட உளவாளிகளோட சங்கேதமா இருக்கும்... தெரியல.. "
"யார்கிட்டயும் சொல்லாதிய.. அந்த ஆள் கண்ணுல ஏதோ கோளாறு. கண்ணாடி இல்லைனா சிமிட்டிகிட்டே இருக்க வேண்டியதுதான்.

"இப்படி பலரும் பல கதைகள் சொல்வார்கள். சின்னக் கோனாரிடம் கேட்டிருந்தால் அவர் சொல்லி இருப்பார். "துரையோட நெசப் பேரு கன்னடியோ என்னவோ. அது வாயில நுழையாம தான் ஊரு இப்பிடி சொல்லிட்டு திரியுது." சின்னக் கோனார், கண்ணடித்துரைக்கு மிகவும் நெருங்கியவர். சிலர் அவரை அவரது காரியதரிசி என்பார்கள். ஆனால், சின்னக் கோனார் துரையிடம், மாத சம்பளம் எதுவும் வாங்குவதில்லை. வெறும் கமிஷன் மட்டும் தான்.

"வெல்டன் சின்னக் கோனார்" என்று சொல்லி விட்டு, தொலைவில் நின்ற அந்த கரிய உருவத்தின் கண்களை நோக்கியவர், சுய நிலைக்குத் திரும்ப சில நிமிடங்கள் ஆயிற்று.

இப்படி எத்தனையோ பேர்களை பார்த்திருக்கிறார். அவர்கள் சபிப்பார்கள். பரிதாபமாக முழிப்பார்கள். வெறுப்பை உமிழ்வார்கள். ஏமாற்றத்தின் வலி தெரியும். கோபம் தெறிக்கும். கண்ணீர் வடிப்பார்கள். வெறுமையில் நிறைவார்கள். சரி போகட்டும் என்று சென்றவர்களும் உண்டு. இதுவாவது கிடைத்ததே என்று திருப்தி பட்டவர்களும் உண்டு. ஆனால் அந்த பார்வை மேலே சொன்ன எதையும் தாங்கி நிற்கவில்லை. அது வேறு. அந்த பார்வை, அவருள் ஊடுருவி விட்டது. அவன் காட்டியது என்ன உணர்வு? அவன் பார்வை அவருக்கு எதையோ நினைவூட்டியது? எதை?

வண்டி நெல்லையில் உள்ள அவரது கிடங்கில் கொண்டு, அப்படியே தலை கீழாகக் கொட்டப் பட்டது.

"துரை.. சீக்கிரம் இதையெல்லாம் காலி பண்ணனும் தொரை. எலிங்க அதிகமா நடமாடுது."
"அது எவ்ளோ சாபிட்டுரும். விடு"
"இல்ல தொரை. நான் சொல்றது வேற.. சரி வேண்டாம் விடுங்க"

மறுநாள், கிடங்கின் காவலாளி கிடங்கினுள் இறந்து கிடந்தான். உடலில் ஏதும் காயங்களில்லை. இறுகப்பற்றிய கைகள். பயத்தில் உறைந்த, திறந்திருந்த கண்கள். பேய் பிசாசு எதுனா கண்டு பயந்திருப்பாரு என்று பேசிக் கொண்டார்கள். அடுத்த நாள் புதியதாக வந்த காவலாளி, உள்ளே அமானுஷ்ய சத்தங்கள் கேட்பதாகவும், இறந்தவர் ஆவியாக அலைவதாகவும் சொல்லி வேலையை விட்டு நின்று விட்டான்.

அடுத்து வந்த நாட்களில், உள்ளே சென்று காவல் காக்க வேண்டாம் என்றும் வெளியில் நின்று கவனித்தால் போதும் என்றும் சொல்லி ஒருவர் காவலுக்கு அமர்த்தப் பட்டார். அவரும் உள்ளே இரைச்சல் அதிகாக உள்ளதென்று பீதியிலேயே காலத்தை கழித்து வந்தார். சின்னக் கோனார் கூறியதன் பேரில், ஒரு மலையாள மந்திரவாதி வரவழைக்கப்பட்டு கிடங்கை பேய்களிடம் இருந்து மீது மீட்டு துரையிடம் சேர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.

"துரை. பேய் பிசாசெல்லாம் பெரிய விஷயமில்ல துரை. நம்ம பொருளுக்கு ஒன்னும் ஆகாது"
"பேய். நான்-சென்ஸ். எல்லாம் இவங்க பயம். என் கவலை எல்லாம், இதை சொல்லியே காவக்காரனுக்கு அதிக பணம் தர வேண்டி இருக்குதேன்னு தான்"

சின்னக் கோனார், இது வரை பேய் பற்றி பயம் இல்லாதவரை கண்டதில்லை. துரை ஒரு மாவீரர் என்று எண்ணிக் கொண்டார். 'இதற்கும் அந்த கருப்பனின் பார்வைக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது' என்று துரையின் உள் மனம் சொல்லிற்று. மந்திரவாதி உள்ளே சென்ற சில நொடிகளில் தலை தெறிக்க ஓடி வந்தார்.

"கரியன்.. துரை... கரியன்.. ஒன்னு ரெண்டு இல்லை நெறைய.. " என்று பட படைத்தார்.
"வாட் இஸ் திஸ் கரியன்... நீதான் எதவேணா விரட்டுவேன்னு சொன்னியே.. இதையும் சேர்த்து விரட்டு"
"இல்ல துரை.. கரியன விரட்ட ஏலாது. மனசு வெச்சு போனா காணாம். யாராலையும் முடியாது தொரை" என்றார் மந்திரவாதி.
"சின்னக் கோனார்.. வாங்க நாம உள்ள போய் பார்த்து வருவோம்" என்று அவரை இழுத்துக் கொண்டு உள்ளே சென்றார் துரை.
"கரியன பிடிக்க முடியாது துரை. கரியன் பொல்லாதவன். வேண்டாம் வந்திருங்க" என்று மந்திரவாதி வெளியில் நின்று கத்திக் கொண்டிருந்தார்.

உள்ளே எலிகளின் நடமாட்டம் குறைந்திருந்தது. மூடைகள் ஒரு மூலையில் குவிக்கப் பட்டிருந்தன. காலடியில் ஏதோ சத்தம் கேட்கவே துரை குனிந்து பார்த்தார். தரையில் ஆறடி, தரைக்கு மேல் தூக்கிய தலை இரண்டடி, ஒரு லத்தி தடிமன். கரு கருவென ஒரு கரியன். தூரத்தில் அதே போல் பல கரியன்கள். எல்லா கரியன்களின் கண்களிலும் ஒரே தீட்சண்யம். துரைக்கு அந்த பார்வை புதிதல்ல. சில நாள் முன்பு பார்த்து மனதில் தங்கி விட்டஅதே பார்வை தான்.

சின்னக் கோனார், சரிந்து விட்டார். வெளியில் வந்த துரையின் கண்ணாடி எங்கோ விழுந்து விட்டிருந்தது. அதன் பின் துரையின் கண்கள் சிமிட்டவில்லை. மந்திரவாதியோ சொல்லிக் கொள்ளாமல் போய் விட்டிருந்தார்.

அன்று இரவே, கிடங்கு பொருட்களுடன் தீக்கிரை ஆக்கப்பட்டது. கரியன்களும் எரிந்து விட்டதாகவே துரை நம்பினார். மக்கள் நம்ப வில்லை.

"கரியன கரியாக்க முடியுமா? பல வருஷமா கண்ணுல தட்டு படாத கரியன், கூட்டம் கூட்டமா தட்டு பட்டு துரை கண்ணு வியாதிய குணமாக்கி இருக்குன்னா சும்மாவா.. கரியன அழிக்க முடியாது.. கரியன் தெய்வம்லா?"

Wednesday, November 16, 2011

கரியன் - 1

கங்கைகொண்டானின் கரிசல் மண்ணில் கதிரவன் கால் பதிக்கும் சில நாழிகைக்கு முன்னதாக, காளைகள் பூட்டிய வண்டியொன்று, பருத்தி பொதிகளுடன் ஊரை விட்டு வெளியேறி திருநெல்வேலி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தது. திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் ரயில்கள் எல்லாம் நின்று செல்லும் நிலையங்களில் கங்கைகொண்டானும் ஒன்று. திருநெல்வேலியையும் மதுரையையும் இணைக்கும் பிரதான சாலையிலோ அல்லது திருநெல்வேலியையும் தூத்துக்குடியையும் இணைக்கும் பிரதான சாலையிலோ கங்கைகொண்டான் அமையவில்லை. பின் ஏன் ரயில் தடம் மட்டும் அவ்வழியே உள்ள, நாரைக்கிணறு, கங்கை கொண்டான், மணியாச்சி வழியே செல்ல வேண்டும்? காரணம் அந்த கரிசல் பூமியின், பருத்தி வளம். இந்த சிறு கிராமங்களில் விளையும் பருத்தியை கொள்முதல் செய்து துறைமுக நகரங்களுக்கு அனுப்பி வைப்பதற்காகவே இந்த வழித்தடத்தை ஆங்கிலேயர்கள் பயன்படுத்தினர். நகரங்களில் கிடைக்கும் விலையை விடக் குறைவான விலையிலேயே பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது.

முத்தையன், வண்டியை விடியும் முன் திருநெல்வேலி சந்தையில் சேர்த்து விட வேண்டும் என்று காளைகளை விரட்டிக் கொண்டிருந்தான். முத்தையனுக்கு வயது இருபதுகளின் ஆரம்பத்தில் இருக்கலாம். குழைத்த களிமண் போன்ற நிறம். எடுப்பான காதுகள், உடலின் நிறத்திற்கு ஒவ்வாத நிறத்தில் கண்கள். நெற்றியின் இரு புறத்திலும் ஏறிய தலைமுடி, தீபகற்ப இந்துஸ்தானத்தின் வடிவில் இருந்தது. வண்டி நகருக்குள் நுழையும் போது விடிந்திருந்தது.

"வண்டியில என்ன?"
"பருத்தி பொதியிங்க எசமான். ஊரில விளைஞ்சது, சந்தைல நல்லா விலை போகுமுன்னு கொண்டாந்தேன்"
"எந்த ஊரு?"
"கங்கை கொண்டான்"
"அப்போ நல்ல பருத்தி தான். நல்ல விலை கிடைக்கும், ஆனா இந்த சின்னக் கோனான் கண்ணில மட்டும் பட்டிராதே. ஆமா உன் பேரு என்ன?"
"முத்தையன்."
"முத்தையன்.... ?"
"....."
"ஓ.. சொல்லக் கூடாத இனமோ.. போ போ ?"

முத்தையன் ஒரு எண்ணெய்க் கடைக்கு எதிரில் இருந்த நிலத்தில் மூடைகளை அடுக்கி கடை பரப்பினான். சிறிது நேரத்தில், அரசாங்க அதிகாரி போல் தோற்றம் கொண்ட ஒருவன் வந்து மூடைகளை நோட்டம் விட்டான். இருவரும் பேரத்தில் இறங்கினர்.
"அந்த வெலை ஆகாது எசமான். இந்த விலைக்கு தொரைமாருங்க கிட்டயே விட்டுருப்பேனே"
"அட.. உன் பஞ்சு இதுக்கு மேல பெறாது. துரைக்கு தெரியாத பருத்தி ரகமா?"
"இது நயம் பருத்தி. சீமை முழுக்க தேடினாலும் இந்த மாதிரி கிடைக்காது"
"இந்த விலைக்கு தந்தா வாங்குறேன். இல்லை போய்ட்டே இருக்கேன்" என்று சொன்னவன் சென்று எண்ணெய்க் கடையில் போய் உட்கார்ந்து கொண்டான்.

சற்று நேரத்தில் இரு காவலர்கள் வந்தார்கள்.
"என்னடா விக்கிறே?"
"பருத்திங்க"
"அது தெரியிது. இது என்ன?"
"எலிங்க. வீட்டில வளர்த்தது, அதுவும் விக்கத்தான்"
"நெல்லு வெளையுற ஊரு இது. எலிக்கறி யாரு வாங்குவா? அது சரி, இங்க கடை போட அனுமதி வாங்கினியா?"
"இல்லைங்க."
"அப்போ கிளம்பு. எந்திரி.."

அதற்குள், எண்ணெய்க் கடையில் இருந்த அதிகாரி அவர்களை கூப்பிட்டு ஏதோ சொன்னார். அவர்கள் அவனை விட்டு நகர்ந்து சென்றார்கள். ஆனால் அந்த அவன் மேல் ஒரு கண் வைத்தபடி வட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள்.
உச்சி வரை, வந்த வியாபாரிகள் எல்லாம் வெறும் பேரத்துடன் முடித்துக் கொண்டனர். கொண்டு வந்திருந்த கஞ்சியை குடித்து விட்டு, சிறிது நேரம் உறங்க ஆரம்பித்தான். அதிகாரி, கிளம்பி வெளியே சென்றிருந்தார். தூங்கிக் கொண்டிருந்தவனை ஒருவர் எழுப்பி, நல்ல விலையில் வாங்கிக் கொள்வதாகச் சொன்னார். ஆனால் அதற்குள், அந்த இரு காவலர்கள், எண்ணெய்க் கடையைக் காட்டி ஏதோ சொல்லவே அவரும் எதுவும் சொல்லாமல் கிளம்பிக் கொண்டார்.

சிறிது நேரத்தில் அதிகாரி வந்தார். மேலும் சிலர் கடைக்கு வந்து வந்து சென்று கொண்டிருந்தனர். எதிர்க் கடையில் இருந்த அதிகாரியைக் கண்டு நகர்ந்து சென்று விட்டனர். இதற்க்கு மேல் எதுவும் விற்காது என்று தெரிந்து, அதிகாரியிடமே சென்று விற்பதாக கூறினான்.

"சரி. அந்த வண்டியில மூட்டையை ஏத்து. தொரை வந்து பணம் கொடுப்பார்"

"ஏய்.. எங்களுக்கு தெரியாம எப்படே எலிங்கள வித்தே. யாருடே வாங்கினா?" என்று கேட்டுக் கொண்டே அந்த இரு காவலர்களும் உதவ முன் வந்தார்கள்.
"வேண்டாம். நானே ஏத்தி வச்சிருதேன்." என்று மறுத்து விட்டான்.

ஒவ்வொரு மூடையிலும் ஒரு லத்தி நுழையும் அளவு ஒரு துளை இட்டு, குப்புற அந்த மூடைகளை அவன் ஏற்றுவதைக் கண்டு விட்ட அவர்கள்,
"இந்த ஓட்டையில, சிந்துற பஞ்சிலையா எங்க தொரை நஷ்டமாவப் போறாரு!" என்று சிரித்துக் கொண்டார்கள்.

"வெல்டன் சின்ன கோனார்.. " என்றபடி துரை அந்த அதிகாரியைத் தட்டிக் கொடுத்தார். முத்தையன் இருவரையும் அமானுஷ்யமாக வெறித்துக் கொண்டிருந்தான்.

(அடுத்த பகுதியில் கரியன் வந்து நிறைவு செய்வான்)

Wednesday, November 2, 2011

கொடைப் பழி

சிங்கிகுளம் பேச்சியம்மன் கோயில்ல ஐப்பசி கொடை. ஊர்ல உள்ள ஒவ்வொரு ஊட்லயும் சொக்காரவுக கூட்டம் நிறைஞ்சு இருந்தது. நாளைக்கு முதக் கொடை. அன்னைக்கே கிடா வெட்டு முடிஞ்சுடும். கடைசி நாள் கிடா வெட்னா, கறி திங்க யார் இருப்பா. அதான் முத நாளே வெட்டிர்றது. ஆனாலும் நம்ம ஆளுக என்ன லேசுப்பட்டவுகளா? கிடா வெட்னதும், கொடை முடிஞ்சதுன்னு அடுத்த வண்டில நடையைக் கட்டிர்றது. இந்த சொக்கரவுக கூட்டம், கிடா வெட்டபாக்கதுக்குன்னா வருதுன்னு நெனைக்கிரீக. கல்யாண வயசுல குமரியவோ, பயலையோ வச்சிருக்கவுக, அதுக்கு ஏத்த வரனா பாத்து பேசிக்க தான் வாரது. பேசி முடிக்கதுக்குன்னு அவுக ஊர் பெரியவுகளயும் கூட்டியாறதும் உண்டும். இந்த வாட்டி, எம்புட்டு கல்யாணம் பேசி முடிக்கப் போறாவுகன்னு ஊரே கணக்கு வச்சுக்கும்.

எசக்கி, இந்த நாளுக்கு தான் காத்து இருந்தான். சிங்கிகுளம் பள்ளியூடத்தில பத்தாப்பூ, இந்த வருஷன் தான் முடிச்சான். "மேல படிக்கனும்னா விளாகத்துக்கு தான் போவனும். ஒரு வருஷம் பொறு. இந்த தையில, அக்காளுங்க ரெண்டையும் கட்டிக் கொடுத்துட்டு, விளாகத்துக்கே போயிடுவோம்"னு அம்மை சொன்னதுக்கு சரின்னு தலையாட்டிட்டு வீட்லேயே, ஆடுகள மேச்சிட்டு கிடக்கான். பெரியவா செவாமி பத்தாப்பூ முடிச்சுட்டு சும்மா தான் இருக்கா. சூட்டியான பிள்ள. காட்டு வேலைக்கு நாலு பெற கூட்டி போறதும் ஒண்ணுதான், செவாமிய ஒத்தையா கூட்டி போறதும் ஒண்ணுதான். மூக்குக்கும் முழிக்கும் பஞ்சமில்லை. என்ன வாய்தான் நீளும். அதுவும் தங்கச்சி தேவானைட்டன்னா இன்னும் அதிகமா. தேவானையும் அளகு தான். இருட்டுல பார்த்தா அக்க யாரு தங்கச்சி யாருன்னு சொல்ல முடியாது. ஒரு வருஷம் தள்ளி பிறந்ததுக. செவாமி அளவுக்கு, தேவானைக்கு நிறம் கிடையாது பாத்துக்கிடுங்க. சோவை வந்தாப்பில, வெளிறி இருப்பா. நம்ம மண்ணுக்கு ஏக்காத நிறமோ என்னமோ, காட்டுக்கு போனா உச்சிக்குள்ள சீக்கு வந்த கோழியாட்டம் தல தொங்கி போகும். வாயும் அதிகமா பேச தெரியாது. படிப்பும் எட்ட தாண்டல. செவாமி, அவள உடம்பு செத்தவா, ஒத்த பிள்ளைக்கு தாங்க மாட்டானுல்லாம் பேசுவா. அம்புட்டுக்கும் ஒரு வாய் பேசாது தேவானை.

விளாகத்தில, செவாமியோட அம்மைக்கு ஒண்ணு விட்ட அண்ணன் ஒருத்தன் இருக்கான். அவன் மவன இந்த கொடையில பேசி முடிக்கறதா பேச்சு இருந்துச்சு. அவுகளும் வந்தாக. பேசியும் முடிச்சாக. சும்மாவே கிடந்தது சலம்புற செவாமிக்கு, சலங்கையும் கட்டி விட்டாப்ல ஆச்சு. "நான் என் நாலாவது பிள்ளைக்கு பேறு காலத்துக்கு வார மட்டும், இவளுக்கு கல்யாணம் ஆகாது. இடுப்பு செத்தவள எவன் கட்டுவான்". இம்புட்டு வார்த்தைக்கும் ஒரு பேச்சு வரல, கண்ணுல ஒரு சொட்டு தண்ணி வரல தேவானைக்கு. பழவிப்போச்சோ என்னமோ?

ரெண்டாம் கொடை. அறுத்த கெடா, துண்டு துண்டா நார்க் கட்டில்ல காயுது. ரவைக்கு கும்பாட்டமும், குறவன் கூத்தும். கும்பாட்டத்துக்கு வாரியான்னா, "விளாகத்துக்கு கட்டிக் கொடுத்தப்பொறவு, கும்பாட்டத்தை நான் ஏன் பாக்கணும். இனிமே ஜினிமா தான் பாப்பேன்"னு நீட்டுனா செவாமி. "இன்னும் கட்டிக் கொடுக்கலல்லா.. வரலாம் வா" ன்னான் எசக்கி. "குடுத்தாதான் ஆச்சா? இன்னிக்கின்னு இல்ல, இனிமே இந்த பட்டிக்காட்டு பாட்டு எல்லாம் எனக்கெதுக்கு. வேணுமினா இந்த வெங்கொரங்க கூட்டிப்போ"ன்னு தேவானைய காட்டுனா. கும்பாட்டத்துக்கு பொறவு, அம்மையோட தேவானைக்கா, வீட்டுக்கு போயிருச்சு. வருஷா வருஷம், எசக்கியயும் இழுத்துட்டு போறவ, இந்த வாட்டி வாறியான்னு கூட கேட்காம போயிட்டா. குறவன் கூத்துக்கும், உட்கார்ந்துட்டான் எசக்கி. கூத்து போவ போவ, ஏன் அம்மை இம்புட்டு நாள் நம்ம பாக்க விடலன்னு புரிஞ்சு போச்சு எசக்கிக்கு. நாம பெரியவனாயிட்டோம்னு சந்தோசத்திலேயே வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

மூணாம் கொடைக்கி, சொரிமுத்து ஐயனார் வில்லுபாட்டு. வீட்டு வாசல்ல ஒலி பெருக்கி, இடி விழுந்தாலும் என் சத்தம் மட்டும் தான் உங்க காதுல விழணும்னு அலறிக்கிட்டு இருக்கு. செவாமிய தவிர எல்லாரும், வில்லு கச்சேரில இருந்தாக. மறுநாள், ஆட்ட ஓட்டிக்கிட்டு மலைக்கு மேய்ச்சலுக்கு கிளம்பினான் இசக்கி. "ஏல இசக்கி, இந்தா இத சூட்டு பாறைல போட்டு எடுத்து வந்துடு"ன்னு ஒரு பெரிய தூக்கில, ரெண்டு நாள் கட்டில்ல கிடந்த கறிய நிரப்பி அனுப்புனா.

ஒரு காலத்தில, சூட்டுப் பாறை கறிக்காக, ஊரே சட்டிய தூக்கிட்டு மலைக்கு வந்துடும். வெயில்ல கிடந்த கறி காஞ்ச கறி, சூட்டுப் பாறைக்கறி, வெந்த கறி. அவ்வளவு மெதுவா ஆக்கிப்புடும் கறிய. இப்போ ஒண்ணு ரெண்டு பேரு போட்டு எடுக்கரதுண்டு. சூட்டுப் பாறை பக்கத்தில தான், மொட்ட முத்து குடியிருக்கான். ஒரு காலத்தில சிங்கிகுளத்தில வாழ்ந்த குடும்பம் மொட்ட முத்து குடும்பம். ஏதோ தப்பு பண்ணிட்டான்னு துணி இல்லாம மொட்டையா ஊர விட்டு அவன அனுப்பிட்டாக. அன்னையிலிருந்து அவன மொட்ட முத்துன்னே ஊரு கூப்டுச்சு. அதுக்கு பொறவு, அவன் ஊருக்குள்ள வரவே இல்ல. அங்கேயே ஆடு மாடு மேச்சுட்டு கிடக்கான். "ஏல.. அந்த மொட்ட முத்துட்ட எந்த பேச்சும் வேணாம் என்னா?" அம்மை சொல்லி அனுப்பினா. இப்படியா ஒரு வாரம் போச்சு. கார்த்திகையும் பொறந்தாச்சு.

அதுக்குள்ள, தேவானை பொறக்கடிக்கு போய் திரும்பியும் வந்திட்டா. அவ வந்த மூணாம் நாள், செவாமி போகணும் அது கணக்கு. ஆனா போகல. நாலாம் நாளு, சீனி பலகாரமா வாங்கி செவாமி வாயில அம்மை திணிச்சா. ஐஞ்சாம் நாளு, கம்மாத் தண்ணிய கணவதிக்கு குடம் குடமா இறைக்கச் சொன்னா. காலையில இறைச்சவா, மாலையில பேச்சியம்மன் கோயிலுக்கும் போயிட்டு வந்துட்டா. ஆறாம் நாளு, "ஏட்டி செவாமி, சங்கரி சித்தி வீட்ல இருந்து அம்மி வாங்கியாரியா. அம்மி கொத்தி நாளாச்சுடி. அறைபடவே மாட்டேங்குது". அடுத்த தெருவில இருந்து, அம்மிக்கல்ல வாங்கி இடுப்பில தூக்கிக்கிட்டு ஊரு பாக்க வீட்டுக்கும் வந்துட்டா செவாமி. வந்த கல்லு மூலைக்கு ஒடுங்கிடுச்சு, செவாமி ஒடுங்கல, நடுக் கூடத்தில உட்கார்ந்து கிடக்கா.

"செவாமி, அம்மிக்கல்ல தூக்கியாரத பாத்தோம், அதான் என்னன்னு கேட்டுப் போகலாம்னு வந்தோம்" னு ஊரு வீட்ல சேர்ந்திருச்சு.

மறுநாள், திருகார்த்திகை, வீட்ட மொழுகி கோலம் போட்டுட்டு, "ஏல எசக்கி, அக்காளுக்கு உடம்பு முடியல. டவுனுக்கு போயிட்டு ரவைக்கு வந்திரலாம் வாயா" ன்னு அம்மை கூப்பிட்டா. 'விளாகத்துக்கு போனா போதாதா? ஏன் டவுனுக்குன்னு' எசக்கிக்கு புரியல. ரவைக்கு திரும்பி வந்தப்போ, வீட்ல தேவானைய காணோம். "எய்யா, மவளக் காணோமே. எங்க போனா" ன்னு அம்மை கேட்கறா. அஞ்சாறு வருஷமா, திண்ணைய தாண்டி வீட்டுக்குள்ளயே வராத ஐயாவுக்கு, மவ உள்ள இருக்காளா, வெளிய போய்ட்டாளான்னு எப்படி தெரியும். ஊர் முழுக்க தேடியும் தேவானைய காணல.

மறுநாள், வீட்ல இருக்கா முடியல எசக்கிக்கு. ஆடுகள ஓட்டிட்டு மலைக்கு வந்துட்டான். மொட்ட முத்து குடிசைல யாரும் இல்ல. உள்ள போட்டது போட்ட படிக்கு இருக்கு. கொஞ்சம் கடுதாசிகளும் கிடைச்சுது. எல்லாத்திலையும் தேவானக்கா கையெழுத்து தான். ஒன்னொன்னா படிக்கான்.
"ரவைக்கு கிளம்பி இரும். அவுக வாரதுக்குள ஊர விட்டு போய்டுவோம் - தெய்வானை"
"எசக்கி கிட்ட எதையாவது பேச்சை கொடுத்து ஒளறி கெடுத்துடாதீக. வாய மூடி இரும் -தெய்வானை"
"இன்னைக்கு குளிச்சிட்டேன். பயமில்ல - தெய்வானை"
"வில்லு கச்சேரிக்கு, போகல. வீட்ல நான் மட்டுந்தான். வந்தா சொகமுண்டும் -தெய்வானை"
"செவாமிக்கு கல்யாணம் பேசியாச்சு. அடுத்து நம்ம கல்யாணம் தான் - தெய்வானை"
"நல்ல வேல, என்னைக் காமிச்சு குடுத்திருவீரோன்னு பயந்துட்டேன். மொட்டையாக்கினாலும், வெளில சொல்லல பாத்தியளா. அதான் உம்ம கிட்ட எனக்கு பிடிச்சது - தெய்வானை"

Tuesday, November 1, 2011

பின்னோக்கி நட

"இந்த தடவையும் ஊத்திக்கிச்சா."

மும்பை நகரின் பிரதான ஐந்து நட்சத்திர ஓட்டலின் இருண்ட பாரின் ஒரு மேஜையில் ஒருவன். இந்த முறை தன் காதலை அவளிடம் சொல்லியே தீர்வது என்ற முடிவுடன் வந்து அமர்ந்திருந்தான். இந்த நாளை விட்டால் பின்பு என்று அவளைப் பார்ப்பானோ அவனுக்கே தெரியாது. அடுத்த ப்ராஜெக்ட் அவளோட கிடைச்சா தான் அடுத்த சான்ஸ். அவளிடம் செல்ல எழுந்தான். அதற்குள் மற்றொருவன் புகுந்து விட்டான். நகராமலா போவான், நகர்ந்ததும் அவளிடம் சொல்லி விடலாம். நகர்ந்தது அந்த மற்றொருவனின் கரங்கள் அவள் இடையில். இவன் நகர்ந்து விட்டான்.

அதே மும்பை நகரின் அதே ஓட்டலின் இருண்ட பாரில் மற்றொரு நாளில், அதே மேஜையில் ஆனால் மற்றொருவன். எல்லாரும் நல்லா தானே இருக்குன்னு சொன்னங்க. பின்ன ஏன்? இந்த மக்களை புரிஞ்சுக்கவே முடியல பாஸ். அவங்களுக்கு எப்போ எது பிடிக்கும்னு சொல்ல முடியாது. பின்ன இந்த மக்களுக்காக நான் ஏன் கஷ்டப்படணும். கஷ்டப்படமாட்டேன்னு முடிவு எடுத்தான். இவனால வந்த கஷ்டத்தைக் கட்டிக்கிட்டு கஷ்டப்பட வேண்டிய அவசியம் தான் மக்களுக்கு என்ன?

அப்போதான் அவங்க ரெண்டு பெரும் அவங்கவங்க தோல்வியிலிருந்து விடுபட பின்னோக்கி நடக்க ஆரம்பிச்சாங்க. அதாங்க சினிமாலலாம் வருமே flashback. அதாவது அவங்க சந்தோசமா இருந்த காலத்து நிகழ்வுகளை அசை போட்டுட்டே நிகழ் காலத்தை ஓட்டிரறது. இவங்க பின்னோக்கி நடக்க ஏதுவா காலமுமா சினிமால வார மாதிரி அசையாம நிக்கும்? அது பாட்டுக்கு முன்னோக்கி போய்க்கிட்டு இருக்குது. இவங்களும் முன்னுக்கும் பின்னுக்குமா மனசும் காலமும் இழுத்த இழுப்புக்கு போனாங்க. இப்போ கதைக்கு வருவோம். அவங்க பின்னோக்கி போறாங்க, காலம் முன்னோக்கி போகுது. நிகழ்காலத்தில் இதை படிக்கிற நீங்க தான் எது முன்னே நடந்தது எது பின்னே நடக்க போறதுன்னு முடிவு பண்ணிக்கணும். என்ன குழப்பிடும்னு பயப்பட்றீங்களா? இவங்க யாரு என்ன கதைன்னு தெரிஞ்சுக்கணுமா. தொடர்ந்து படிக்கறத தவிர வேற வழியில்லை பாஸு. நீங்க தான் அலெர்ட் ஆச்சே, ட்ரை பண்ணுங்களேன்.

"இந்தக் கதை நிச்சயமா தோற்காது. ஜெயிக்கறதுக்கு தேவையான எல்லா மசாலாவும் சேர்த்து பண்ணி இருக்கேன்."

"கதையை சொல்லிடறேன். கேட்டும் புரியலன்னா பின் நவீனத்துவம் மாதிரி வேற ஏதாவது வார்த்தை சிக்காமலா போயிடப் போறது?"

"ஏம்பா.. யாரோ கதை சொல்ல வந்துருக்காங்க. வந்து என்னன்னு கேளு" என்றபடி அப்பா வெளியே சென்று விட்டார்.

"பெருசோ சிறிசோ, இருக்கிற நிலைமைல எதையாவது கேட்டு மனசு நோகும்படி ஏதாவது சொல்லிராத" அம்மாவை அப்பா எச்சரித்தார். எந்த ஊர்ல பொம்பளைங்க, புருஷன் சொல்றத கேட்டாங்க?

"வாழ்க்கைன்னா வெற்றி தோல்விகள் வந்து போகத்தான் செய்யும். இதுக்காக அடுத்த கதைக்கு போக மாட்டேன்னா எப்படி?" என்றாள். அவளுக்காக அடுத்த கதை.

"குடும்பத்துக்குள்ளேய ஒருத்தருக்கொருத்தர் காலை வாரிக்கறான்களே" என்று அங்கலாய்த்தாள்.

"கதையை எப்படி வேணா முடிக்கலாம். ஆனா அமங்கலமா தொடங்க வேண்டாமே"

"இந்த கதை ஜெயிக்கிதோ இல்லையோ, இதை வச்சே அவள மடக்கிடலாம்" என்பதற்காகவே இந்த படம்.

"புரியலைனா கடைசி நேரத்தில் ஸ்லைடு போட்டு சொல்லிட்டா போகுது"

"இந்தக் கையை இன்னும் கொஞ்சம் மேல, அழுத்தமா கூச்சப் படாம வைக்கணும். இது என்ன முதப் படமா? இந்தா நான் எப்படி பண்றேன்னு பாருங்க. இப்படி இப்படி"

"இந்த கதை நெறைய பேருக்கு புரியாதுன்னு நெனைக்கிறேன். ஜெயிக்குமா?"
"ஜெயிக்கறதுக்கு படம் எடுக்கறது அந்தக் காலம், இப்போ படம் எடுக்கறது வேற வேற காரணங்களுக்கு"

"இன்னைக்கு நைட் பார்ட்டி. படம் நல்லா வந்திருக்கு. எல்லாரையும் கூப்டிருக்கேன். நீயும் வந்திடு"

"உங்க முன்னாடி எப்படி எனக்கு கொஞ்சம் வெட்கமா இருக்கு"

"ஜீரோ டிகிரி ரொம்ப பிடிக்குமாமே. என்கிட்டயும் அதே மாதிரி ஒரு கதை இருக்கு சொல்லட்டுமா?"

"படம்னு வந்துட்டா, கொஞ்சம் அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும். அட்ஜஸ்ட் பண்ணிக்கோ"

"உங்ககிட்ட நான் தனியா பேசணும். ராத்திரி பார்ட்டில பேசலாமா"

"எல்லாம் கதை தானே"

டைரக்டர் கதை சொல்ல ஆரம்பித்தார். "மொத்தமா கதைல அஞ்சு பேர். டபுள் ஹீரோ சப்ஜக்ட். அவங்களோட காதலி. அவங்களோட அம்மா அப்பா." ஹீரோ "அஞ்சு பேர்னு சொன்னே. எட்டு பேர் வர்றாங்களே". "கதையை முழுசா சொல்லிட்டா இந்த குழப்பம் வராது. இரண்டு தனித்தனி காதல் கதைகள் இணை கோடுகள். அந்த கதையில், இரண்டு காதலையும் இணைக்கிற மாதிரி இணைப்பா ஒரு உறவு வரும் போது, அது ப வடிவ காதல் கதை. இப்போ கதைக்கு தேவை ஆறு பேர் தான் இல்லையா. இணையாத அந்த இரண்டு முனைகளும், கோட்டால் இணைக்கப் படாது, புள்ளியில் இணைந்தால். மொத்தமா அஞ்சு பேர் தான் படத்தில. கதையும் முக்கோணக் காதல் கதை." "இது எந்த இங்கிலீஷ் படத்தில் இருந்து சுட்டது." "அட இது நம்ம சொந்தக் கதைப்பா" என்று முடித்தார் டைரக்டர்.

"கட்"

ஒரு வயசு புத்திசாலி

தூக்கத்தில் இருந்து கண் விழித்து பார்க்கிறேன், எல்லாமே மாறி இருக்குது. இது எங்களோட இடம் இல்ல. எங்களோடதுன்னா, நான், அம்மா, அப்பா, சித்தி, பெரியம்மா, அக்கா, பாட்டி இப்படி எங்களோடது. அவங்களும் கூட இங்க இல்ல. நான் எப்படி இங்கே வந்தேன்னு எனக்கு தெரியல. ஆனால் இப்படி ஒரு நாள் நடக்கும், அப்படி நடக்கும் போது நான் என்ன செய்யணும்னு எனக்கு எங்க அப்பா சொல்லிக் கொடுத்திருக்கார். ஆனால் அது இவ்வளவு சீக்கிரம் நடக்கும்னு நான் நெனைச்சு பார்க்கல. பொதுவாவே எனக்கு எல்லா விஷயங்களையும் சொல்லிக் கொடுக்கிறது அம்மா தான். ஆனா இந்த ஒரு விஷயத்தை மட்டும் அப்பா சொல்லி இருக்கார். மறுபடியும் மறுபடியும். இதை தவிர அப்பா எனக்கு வேற எதையும் சொன்னதா ஞாபகம் இல்ல. அப்படி எனக்கு என்ன வயசாயிடுச்சு. மிஞ்சிப் போனா ஒரு வயசு இருக்குமா. ஐயையோ கதையோட சஸ்பென்ச சொல்லிட்டேனோ. பரவாயில்ல. இதுவே வேற யாராவது இருந்தா இந்நேரம் அழுது இருக்கணும். நான் அழறேனா? இல்ல. இந்த ஒரு வருஷமா எனக்கு அம்மா கொடுத்த அறிவும், நம்பிக்கையும் வீண் போகாது. கண்ணைத் தொட்டு பார்க்கிறேன். இல்ல அழல. இப்போ முத வேலையா அவங்க எங்க இருக்காங்கன்னு கண்டு பிடிக்கணும். எங்களுக்கு வேண்டாதவங்க யாரோ தான் இந்த காரியத்த செஞ்சிருக்கணும். எழுந்து கொஞ்ச தூரம் நடந்து போகிறேன்.

நான் அங்கே இருந்தவரை, எழுந்ததும் ஏதாவது சாப்பிட இருக்கும். இன்னும் அப்பா அம்மா மாதிரி கடின உணவு வகைகளை சாப்பிட பழகல. எனக்குன்னு அம்மா மென்மையா எதோ சாப்பிடக் கொடுப்பாங்க. அது பேர் கூட எதோ.. அட மறந்துடுச்சே. உங்களுக்கு தெரியுமா? நான் என்ன சாப்டுவேன்னு, சொல்லுங்களேன். இல்ல அதெல்லாம் இல்ல. நீங்க சொல்ற எதுவுமே இல்ல. அது பேரு வேற எதோ. ஒரு நிமிஷம், கடவுள்கிட்ட கேட்கலாமே. உங்களால எல்லாம் கடவுள் கிட்ட அவ்வளவு சுலபத்தில பேசிட முடியாது. ஆனா நான் நெனச்ச நேரத்தில, கடவுள் கிட்ட பேச முடியும். நான் வாங்கி வந்த வரம் அப்படி. என்னோட வயசு தான் காரணம்னு சொல்றீங்களா? இருக்கலாம். "ஹலோ கடவுளே. நான் சாப்பிடுற அந்த பொருள் பேர் என்ன?" "நான் சொல்ல மாட்டேன். எத்தன தடவ அம்மா சொல்ற எல்லாத்தையும் கேட்டு ஞாபகம் வச்சுக்கோ. என்னைக்காவது தேவைப் படும்னு சொல்லி இருக்கேன். நீ கேட்கல. நான் சொல்ல மாட்டேன். நீயா தெரிஞ்சுக்கோ" என்று சொல்லி விட்டு கடவுள் மறைந்து விட்டார். அம்மா சொல்லி இருக்காங்க, கடவுள்னாலே இப்படி தானாம். தேவை இல்லாதப்போ அட்வைஸ் கொடுத்துட்டே இருப்பாராம். ஆனா தேவைன்னு கேட்டா சொல்ல மாட்டாராம். கேட்டா திருவிளையாடல், லீலைன்னு கலாய்ப்பாராம். இன்னும் கொஞ்ச நேரம் நடந்து பாப்போம், ஏதாவது தென்படுதான்னு. அதோ அவர்கிட்ட கேட்டு பாப்போம்.

இவரையும் எங்கேயோ ஒரு நாள் பார்த்திருக்கோமே. அவர்கிட்ட நடந்ததெல்லாம் சொன்னேன். அவருக்கு என்ன புரிஞ்சதோ தெரியல. அவருக்கு நான் பேசற எதுவுமே புரியலன்னு நெனைக்கிறேன். அவர் என்கிட்டே கேட்டார்? "பசிக்குதா? என்ன சாப்பிடுவே?". நாசமாப் போச்சு. இவருக்கும் நான் என்ன சாப்பிடுவேன்னு தெரியல.ஏதோ இந்த மட்டுக்கும் புரிஞ்சதே. வர வர இந்த உலகத்தில முட்டளுங்களோட எண்ணிக்கை கூடிட்டே போகுது. எல்லாரும் எங்க குடும்பத்தில உள்ள அளவுக்கு புத்திசாலிங்க இல்ல. இவர் பாக்க கருப்பா மலையாட்டம் இருக்கார். ஆள் வளர்ந்தா மட்டும் போதுமா. "நீ என்ன சாபிடுவேன்னு எனக்கு தெரியலியே. இது சாப்பிடுவியா?". ஐயே.. இத யாராவது சாப்பிடுவாங்களா? இல்லைன்னு தலை ஆட்டினேன். "என்கிட்டே இது தான் இருக்கு. உன்னையும் விட்டுட்டு போயிட்டாங்களா? பயப்படாதே. உனக்கு வேற ஏதாவது வேணுமா?" என்று கேட்டார். நான் காலைக் காட்டி, கால் வலிக்குதுன்னு சொன்னேன். "நான் உன்னைத் தூக்கிக்கவா?" என்று கேட்டார். சரி என்று ஏறிக் கொண்டேன். "நல்ல பொதுக் பொதுக்குன்னு மெல்லிசா இருக்கியே" என்றார். "எங்க அம்மா இன்னும் சாப்டா இருப்பாங்க" "பொம்பளைங்க எல்லாருமே அப்படிதான்" என்றார். ஐயே என்ன இவர் வல்கரா பேசறார்.

அதற்கு பின் அவரிடம் பேசவே மனசு வரல. இப்படிதான் பொம்பளைங்கள பத்தி கமன்ட் பண்றதா? அவர் எதோ கதை கதையா பேசிட்டே போனார். அப்பா சொல்ற அதே கத மாதிரி தான் இருந்தது. ஆனா வேற மாதிரியும் இருந்தது. அப்பா அளவுக்கு இவர் புத்திசாலியும் இல்ல. அப்பாவோட விஞ்ஞான அறிவு, என்னோட ஜீன்களில் இருப்பதால தான் நான் இந்த வயசிலேயே இவ்வளவு புத்திசாலியா இருக்கிறேன். இவர் இன்னும் பரிணாம வளர்ச்சியில பல படிகளைக் கடக்க வேண்டியிருக்கு. என்னோட அப்போவோட ஆராய்ச்சி மட்டும் வெற்றி ஆயிடுச்சுன்னா,எங்களோட சந்ததிகள் எல்லாருமே invisible ஆகிருவோம். அதுக்கு அப்புறம், இந்த கடவுள் இருக்காரே, அவர மாதிரி யார் கண்ணுக்கும் தெரியாம எங்க இஷ்டத்துக்கு வாழ்க்கைய வாழலாம். அவர மாதிரியே திருவிளையாடல், லீலைன்னு பண்ணிக்கிட்டு ஜாலியா பொழுது போக்கலாம். இது எல்லாம் நடக்கணும்னா, முதல்ல நான் உயிரோட இருந்து ஆகணும். அதுக்கு சாப்பாடு வேணும். "நிறுத்துங்க".அந்தா இருக்கு என்னோட சாப்பாடு.

"ஹலோ, என்ன கேட்டிங்க. இதையா சாபிடுவேன்னா? நீங்க என்னை என்ன மனுஷன்னு நெனைச்சுக்கிட்டு இருக்கீங்களா. மனுஷங்கள் தோன்றதுக்கே இன்னும் சில ஆயிரம் வருஷங்கள் ஆகும். அந்த நேரத்தில எங்களோட சக்தி இன்னும் பல மடங்கு அதிகரிச்சு, நாங்க தான் அவங்கள ஆட்டி வைப்போம். எங்களோட அறிவு உங்க மனுஷங்கள விட, பல மடங்கு அதிகமா இருக்கும் அப்போ. உதாரணத்துக்கு இதையே எடுத்துக்கங்களேன். பல்லாயிரம் வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்த எங்க இனத்தவர்களில் இளையவனான என்னோட அறிவையே, சரியா யூகிச்சு எழுத முடியாம இந்த மடையன் திணறிக் கிட்டுருக்கான். என்னைப் போய் மனுஷனான்னு கேட்டுட்டிங்களே. என்ன அவமானம். இன்னொரு தடவ அந்த மாதிரி கேட்டிங்கன்னு வைங்க, இப்போ உங்ககாலத்தில வாழ்ந்துட்டு இருக்கிற எங்க ஆளுங்க உங்கள ஒன்னும் இல்லாம ஆக்கிருவாங்க. ஜாக்கிரத. என்ன கடவுளே.. நான் சொல்றது சரி தானே?"

"இந்த species க்கும், தான் என்கிற அகம்பாவம் வந்திருச்சே. இப்படி எத்தன இனங்கள அழிக்கிறது. தயவு செஞ்சு நீங்களாவது, நான் தான் புத்திசாலின்னு அகம்பாவம் பிடிச்சு அலையாதீங்க. ப்ளீஸ்" என்று கடவுள் உங்களிடம் கேட்டுக் கொள்கிறார்.

கம்பன் வீட்டு கட்டுத் தறி

"சினோரே! சினோரே! சீக்கிரம் எழுந்திருங்கள். உங்களிடம் ஒரு முக்கிய உதவிக்காக வந்துள்ளேன். எங்கள் பிரச்சனைகளை நீங்கள் மட்டுமே தீர்க்க முடியும். எழுந்திருங்கள்". சினோரே என்று விளிக்கப்பட்ட அந்த மனிதர் எழுந்து, தன்னை எழுப்பிய உருவத்தை நன்கு ஆராய்ந்தார். இளம் பச்சை நிறத்தில் செடி போன்ற உடலமைப்பைக் கொண்டிருந்த அந்த உருவத்திடம் "நீ யார்? உங்களது பிரச்சனை என்ன?" என்றார்.

"சினோரே! நாங்களும் எங்கள் வம்சத்தவரும் பன்னெடுங்காலமாக வாழ்ந்து வரும் எங்கள் பூர்விக இடத்தை எம்மிடம் மீட்டுத் தரக் கோரி உங்களிடம் வந்துள்ளேன்." செடியின் தண்டு போலிருந்த உடலமைப்பையும், கொத்து கொத்தாக இருக்கும் இலைக் கூட்டங்கள் போன்ற பசுமை வர்ணத் தலையும் கொண்ட உருவத்தையும் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்த அவர், "நீங்கள் எங்கே இருக்கிறீர்கள். யார் நீங்கள்? கொஞ்சம் விளக்கமாக கூறு" என்றார்.

"நாங்கள் வசித்து வந்த இடம், எங்களைப் போலவே பசுமையான குளுமையான இடம். பல தலைமுறைகளாக, இருந்த இடத்திலேயே உணவு, சுவாசிக்க காற்று என எங்களுக்கு தேவையான யாவும் கிடைத்ததால், நிலத்திலேயே காலூன்றி வாழ்ந்து வந்தோம்." 'இவைகள் செடிகள் தாம். வேர்களைக் கால்கள் என்கின்றன' என்று உறுதி படுத்திக்கொண்டார். அது மேலும் தொடர்ந்தது, "இவ்வாறு பல காலம் செழிப்பாக வாழ்ந்து வந்த எங்களுக்கும் ஒரு கெட்ட காலம் வந்தது. வசதி வாய்ப்புகளின் காரணமாக எங்களின் மக்கட்தொகை, கணக்கில் அடங்காமல் பெருகிற்று. எங்களுக்கு என்று இருந்த நிலப் பகுதி போதாமல் போக ஆரம்பித்தது. ஆயினும் நாங்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் வழமை இல்லாமையால், இருந்த நிலத்தில் நெருங்கி வாழ்ந்து வந்தோம். ஒரு கட்டத்தில், இடப் பற்றாக்குறையால் எங்களில் சிலர் எங்கள் கால்களை நிலத்தில் இருந்து விடுவித்துக் கொண்டு மிதக்க ஆரம்பித்தனர். அது வரை, நிலத்தில் கால் புதைத்தே வாழ்ந்து பழகிய அவர்களுக்கு, நிலத்தில் கால் புதையாமலும் வாழ முடியும் என்ற நம்பிக்கை வந்தது. இவ்வாறாக எங்களின் மிகப் பெரிய பிரச்சனையான இடப்பற்றாகுறைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தோம்." 'என்ன? செடிகள் நிலத்தில் இருந்து விடுபட்டு உயிருடன் வாழ முடியுமா? அதிசயமாக அல்லவா இருக்கிறது!' "சரி. உங்கள் பிரச்சனைகளைத் தான் நீங்களே தீர்த்துக் கொண்டாயிற்றே. நான் என்ன செய்ய வேண்டும்?" என்றார்.

"சினோரே! எங்கள் தலையாய பிரச்சனை அதன் பின் தான் ஆரம்பித்தது. எங்கள் உலகத்தில், உங்கள் உலகம் போல் இல்லாமல், மூன்று நிலவுகள் உண்டு. ஒன்று தங்க நிறத்திலும், ஒன்று வெள்ளி நிறத்திலும், மற்றொன்று கரு நிறத்திலும் இருக்கும். வெளியில் இருந்து கிடைக்கும் வெளிச்சம் எங்கள் உணவு தயாரிப்புக்கு போதுமானதாக மட்டுமே இருந்து வந்தது. உங்கள் உலகில் வரும், அமாவாசை, பௌர்ணமி போல் நிலவுகள் வருவதும் போவதும் உண்டு. பௌர்ணமியின் போது, எங்கள் நிலவுகள் ஜொலிப்பதை நாங்கள் கண்கொட்டாமல் ரசித்து வந்தோம். எங்கள் நிலவுகளில் மூன்று வண்ணங்கள் உள்ளமையால், எங்கள் பௌர்ணமி உங்களுடயதைக் காட்டிலும் ரம்மியமாக இருக்கும். எங்கள் கருப்பு பௌர்ணமி, உங்களவர்கள் இதுவரைக் கண்டிராத ஒன்று. உங்கள் அளவுக்கு வான சாஸ்திர அறிவு எம்மவர்களுக்கு இல்லையா? அல்லது எங்கள் நிலவுகள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வருவதில்லையா எனத் தெரியவில்லை. எத்தனை காலத்திற்கு ஒரு முறை பௌர்ணமி வரும் என்று எங்களால் அறுதியிட்டு கூற முடியவில்லை.நாங்கள் உங்களிடம் கேட்கும் முதல்உதவி இதுதான். எங்கள் பௌர்ணமி எத்தனை காலத்திற்கு ஒரு முறை வரும் என்று கண்டறிந்து கூற வேண்டும். எங்களுக்கு சூரியன் இல்லாததால், நாள் என்ற கணக்கும் தெரியாது. எங்களது இரண்டாவதும் மற்றும் முக்கியமானதுமான உதவி .... " "பொறு. நான் எப்படி உங்கள் உலகத்தின் கால அளவுகளைக் கணிக்க முடியும். நீ சொல்வது போன்ற ஒரு உலகத்தை நான் இதுவரை என் தொலைநோக்கியில் கூட கண்டதில்லையே. நான் பைசா நகரத்தை விட்டு ரோமிற்கு வந்தது இந்த கோபர்நிகசுக்கு ஆதரவு தெரிவித்து, சர்ச்சின் தாகுதலில் இருந்து அவனை காப்பாற்ற மட்டுமே. நான் அவன் போல், வானவியல் அறிஞன் இல்லை. நீ வேண்டுமானால், அவனிடம் சென்று கேட்டுப் பாரேன்" என்று சொல்லி கழற்றி விடப் பார்த்தார்.

"சினோரே.. நாங்கள் உங்களைக் கண்டு கொள்ளவே மிகுந்த சிரமப் பட்டோம். நீங்கள் எங்கள் மீதக் கதைகளையும் கேளுங்கள். நிச்சயம் உங்களால் எங்களுக்கு உதவ முடியும் என்றே நம்புகிறோம்." 'இது நம்மைவிடாது' போலிருக்கிறதே என்று எண்ணிக் கொண்டார். "சரி செய்கிறேன். ஆனால் இந்த நாள் கணக்கை கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?" "நன்றி சினோரே, எங்களது இரண்டாவது உதவி என்ன என்று தெரிந்தால் இந்த கணக்கு எங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்று தெரிந்து கொள்வீர்கள். உங்கள் உலகில், வானில் நடக்கும் மாற்றங்களைக் கொண்டு உலகில் நடக்க இருக்கும் நிகழ்வுகளை கணிப்பீர்கள் அல்லவா. அதே போன்றே எங்கள் உலகிலும், இந்த நிலவுகள் வரும் காலங்களில் கொத்து கொத்தாக நாங்கள் காணாமல் போகிறோம். எனவே எங்களைப் பாதுகாக்க இந்த நிலவு வரும் காலம் எம்மவர்க்கு தெரிய வேண்டியது அவசியமாகிறது. எங்களால் நிலவு வரும் காலத்தை கணிக்கவே முடியவில்லை. குறிப்பாக, நாங்கள் நிலத்தில் இருந்து கால் விடுத்துக் கொண்ட பின், எங்கள் ஆகாயம் கலங்கி விட்டது. நிலவுகள் வருவதை எங்களால் முன்பு போல் காண முடிவதில்லை. மிதக்க ஆரம்பித்ததன் இரண்டாம் பக்க விளைவுகள் இவை. நிலவுகள் சில காலமாக, நீங்கள் இங்கு வந்த காலம் முதல் அடிக்கடி வர ஆரம்பித்துள்ள்ளன என்று எண்ணுகிறோம். இவ்வாறே சென்றால் எங்கள் வம்சம் முழுவதும் அழிந்து விடும் என்று நாங்கள் அச்சப் படுகிறோம். எங்களில் சிலர் எங்கள் பூர்விக பூமியை விடுத்தது வேறு இடம் செல்லவும் முடிவு செய்துள்ளனர். எனவே நீங்கள் .. " என்று சொல்லிக் கொண்டே சென்றது. கலிலியோவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் வான சாஸ்திரம் புரிய ஆரம்பித்தது.

கலிலியோ ரோமிற்கு வந்த நாள் முதல், இத்தாலிய சேசு சபையின், ரோபர்ட் பெல்லர்மினின் விருந்தினர் அறையில் தங்கி வருகிறார். அந்த காலங்களில், தங்கமீன் வளர்ப்பு இத்தாலியில் பிரபலம் ஆகி இருந்தது. அவர்கள் வழக்கப் படி, விருந்தினர்களின் படுக்கைக்கடியில், பளிங்கு தொட்டிகளில் மீன் வளர்ப்பார்கள். படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த கலிலியோ எழுந்து, படுக்கைக்கடியில் பாசி படிந்திருந்த மீன் தொட்டியை வெளியில் இழுத்தார். தொட்டியில் இருந்த பாசி படிந்த நீரை மாற்றி விட்டு, தங்கம், வெள்ளி மற்றும் கருமை நிறத்தில் இருந்த மீன்களை மீண்டும் தொட்டியில் விட்டார்.