Thursday, October 20, 2011

உடனே கிளம்பி வரவும் -3

அவர்கள் பேசிக் கொண்டதன் படி, புருஷோத்தமன் நாளை காலை வந்து அதன் பின் முடிவு எடுக்கலாம் என்று இருந்தது. ஒருவேளை புருஷோத்தமன் விரைந்து வந்திருப்பாரோ? இல்லை. விளக்குகள் எரிய வில்லை. வேறு எதோ? யாரும் அம்பிக்காக காத்திருக்க வில்லை. பின் யார் எங்கே வரச் சொல்லியிருக்கக் கூடும். அப்பாவாக இருக்குமோ? என்று யோசித்த அம்பி, அங்கே சென்றான். அப்பா அங்கே உயிருடன் இல்லை. அவர் உடல் வெப்ப நிலையில் இருந்து அவர் இறந்து சில மணி நேரங்கள் ஆகி இருக்க வேண்டும் என்று தெரிந்தது. உறைந்து நின்றான்.

சில நிமிடங்களில் அனைவரும் கூடி விட்டனர். "என்ன பேசிக் கொண்டீர்கள்?" என்றான் அஜித். "எதுவும் பேசவில்லை". "எதுவும் பேசவில்லை என்றால் இந்த நேரத்தில் இங்கு எதற்கு..." "ஒரு தந்தை மகனுக்கு இடையில் ஆயிரம் விஷயங்கள் இருக்கும் பேசுவதற்கு. நீ அதைக் கேள்வி கேட்க வேண்டாம்." "கொலை செய்வதும் அதில் ஒரு விஷயமோ?" "அஜித், உளறாதே. என் அப்பாவை நான் ஏன் கொல்ல வேண்டும்? காரணம் வேண்டாமா?" "இன்று நடந்த விவாதம் போதாதா? உன் அப்பா உன் முடிவை ஏற்கவில்லை. நீ அதை ஏற்கவில்லை." "அதற்காக கொல்லும் அளவிற்கு நான் ஒன்றும் கொடுமைக்காரன் அல்லவே. ஏன் நீங்களே கொன்று விட்டு, என்னை அடக்க என் மீது கொலைப் பழி சுமத்துவதாகக் கொண்டால்...?" "ஓ நீ சூழ்ச்சியும் கற்றுக் கொண்டாய் அவனிடத்தில்! நாளைக் காலை, புருஷோத்தமன் வந்த பின் வைத்துக் கொள்ளலாம் எல்லா விவாதத்தையும். சென்று உறங்கு. எம்மவர்களின் காவலில்."

'இவனிடம் என்ன சொன்னால் கேட்பான்? புருஷோத்தமன், அஜித் அளவிற்கு கூட காது கொடுத்து கேட்க மாட்டான். நான் குற்றமற்றவன் என நிரூபிக்க ஏதேனும் வழி உள்ளதா? இருக்கிறது'. "நான் குற்றமற்றவன் இல்லை என இன்று இரவே நிரூபிக்கிறேன். கொலை நடந்த வேளையில் நான் இங்கு இல்லை என்றால், நான் செய்திருக்க முடியாது அல்லவா?" "ஓ நீ இங்கு இல்லையோ? பிறகு வேறு எங்கு இருந்தாய், மேனகாவின் மடியிலா?" எக்காளமாக சிரித்தான். "மேனகாவை வரச் சொல்லுங்கள். எல்லாம் புரியும்". "உன் காதலி உனக்கெதிராய் சொல்வாளா? இருந்தும் வரச் சொல்கிறேன். அவளிடம் இருந்து எப்படி உண்மையை வாங்குவது என்று எனக்கு தெரியும். வரச் சொல்". புருஷோத்தமனின் வேலையாள் ஒருவன் விரைந்து ஓடினான்.

நேரங்கள் கரைந்தது. அதோ வந்துவிட்டான், ஆனால் தனியாக! "எதிர் பார்த்தேன். நீ அகப்பட்டுக் கொண்டதும், உனக்கு முன் தப்பித்துச் சென்று விட்டாளா? என்ன காதல்? என்ன காதல்! போய் உறங்கு". அவர்கள் போய் விட்டார்கள்.

அம்பி குழம்பி விட்டான்.'மேனகா எங்கே சென்றாள்? அவளையும் அஜித் பிடித்துக் கொண்டு பொய் சொல்கிறானோ? அப்படித்தான் இருக்கும். திட்டம் பலமாகத் தீட்டி இருக்கிறான். இன்று இரவே தப்பித்து அவனுடன் சேர்ந்து விடுவது தான் உசிதம்.' இவ்வாறு எண்ணிக் கொண்டே அம்பி படுத்திருந்தான். எவ்வளவு நேரம் போனது என்று தெரியவில்லை. வாசலில் யாரோ அழைத்தார்கள். அம்பியின் ஆட்களாய்தானிருக்கும். அவன் திரும்பவில்லை. உருவம் நெருங்கி வந்தது.

விஷ்ணுகுப்தர்!

"அம்பி! நீ மிகப் பெரிய சதியில் மாட்டி இருக்கிறாய். உன் அப்பாவைக் கொன்றது போல் உன்னையும் கொன்று விடுவார்கள். எனக்கு நன்மை செய்தவர் குடும்பம் காணாமல் போவதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ம்ம். சீக்கிரம் கிளம்பு. நான் உன்னை பிறகு சந்திக்கிறேன்." என்று தப்பிச் செல்வதற்கான எல்லா வழியையும் சொல்லிச் சென்று விட்டார்.

அம்பி தப்பித்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்கு செய்தி சொல்வதற்காக ஏதாவது/ யாராவது தென்படுகிறார்களா? என்று பார்த்தான். செய்தி என்றதும், நேற்று இரவு செய்தி சொன்ன கல் ஞாபகம் வந்தது கூடவே அது இருந்த இடமும். "ஆம். துணை வேந்தர் அறையில் அந்தக் கற்கள் அழகாக அடுக்கி வைக்கப் பட்டிருக்கும். இதே போன்ற கற்கள் மேனகாவின் வீட்டிலும், கிரேக்கத்தில் இருந்து வந்ததாய்ச் சொல்லி வைத்திருந்தார்கள். புரிந்து விட்டது. நேற்று வந்த செய்தி எனக்கல்ல. இந்த சதியில் அனைவரும் இருக்கிறார்கள். யார் எந்த விகிதத்தில் என்பது தான் தெரியவில்லை. அவனுக்கு செய்தி அனுப்பத் தான் வேண்டுமா? அனுப்பினால் தானே தெரியும்.. யார் யார் பக்கம் என்று" தெளிவான மனதுடன் அவனுக்குச் செய்தி அனுப்பினான் "உடனே கிளம்பி வரவும்"

(முற்றும்)

கதைமாந்தர்கள்:
உருவங்கள்:
அம்பி : தக்ஷசீலத்தை தலைநகராய்க் கொண்ட காந்தார நாட்டு இளவரசன், கிரேக்க மொழியில் 'Omphis'
விஷ்ணுகுப்தர்: தக்ஷசீல பல்கலைக்கழக துணை வேந்தர். வரலாற்று மொழியில் 'சாணக்யர்'
மேனகா: கணிகை. கற்பனைக் கதாப்பாத்திரம்.
அஜித் சந்திரன்: கைகேய படைத் தளபதி. கற்பனைக் கதாப்பாத்திரம்.

அருவங்கள்:
அவன்: மாசிடோனிய மாவீரன் அலக்சாண்டர்.
புருஷோத்தமன்: கைகேயத்தின் அரசன், பௌரவ வம்சத்தவன், கிரேக்க மொழியில் 'Porus'
மற்றும் கிரேக்க மேதை அரிஸ்டாட்டில்.

காலம்: கிமு நான்காம் நூற்றாண்டின் கடைசியில்.

Wednesday, October 19, 2011

உடனே கிளம்பி வரவும் - 2

புருஷோத்தமனின் ஆட்கள் வந்திருக்கிறார்கள் என்பதை வாசலிலேயே தெரிந்து கொண்டான். சமீப காலங்களில் அவர்களின் வரவு அதிகமாகி இருக்கின்றது. ஒவ்வொரு முறையும் அம்பியின் மீது புதிது புதிதாய் குற்றச்சாட்டுகளுடன் கிளம்பி வருகிறார்கள். அவர்கள் பேசும் விதத்தில் அம்பியின் அப்பாவும், அவர்கள் சொல்வதே சரி என்றும் நம்பி விடுகிறார். இவ்வாறு சிந்தித்துக் கொண்டே உள்ளே நுழைந்த போது, புருஷோத்தமனின் ஆட்களுடன், விஷ்ணுகுப்தரும் வந்திருப்பது கண்டு அம்பி வியப்படைந்தான். புருஷோத்தமனின் சார்பில் வழக்கம் போல், அஜித் சந்திரனே வந்திருந்தான். அப்பாவே ஆரம்பித்தார்.

"வகுப்புகளுக்கு சில வாரங்களாகவே செல்வதில்லையாமே?".
"விஷ்ணுகுப்தர் சொன்னாரா?"
"இல்லை. அஜித் சந்திரன் கூறிக் கேட்டது. விஷ்ணுகுப்தர் இந்த விவரத்தை சரிபார்க்க மட்டுமே வரவழைக்கப் பட்டார்."
'ஒரு மாணவனின் வருகை குறித்த தகவல் அளிக்க துணை வேந்தரே வருவதாவது? அந்த அளவுக்கு வளைந்து கொடுப்பவரா இந்த விஷ்ணுகுப்தர்? வேறு எதோ வில்லங்கம் இருக்கிறது '. "நான் வகுப்புகளுக்கு ஒழுங்காக செல்வதில்லை, என்ற தகவலைக் கொடுக்கத்தான் அஜித் வந்தாரா?" என்று விஷ்ணுகுப்தரில் இருந்து பார்வையை விலக்கி அஜித் மேல் பதித்தான்.

"இல்லை. நீங்கள் வகுப்புகளுக்குச் செல்லாமல், வேறு எங்கு செல்கிறீர்கள் என்ற தகவலைத் தருவதற்கு வந்தேன்". மிகப் பெரிய இரகசியத்தை தான் அறிந்து கொண்ட பெருமையுடன் கூறினான்.
"எங்கு சென்றிருந்தாய்? அஜித் சொல்வது போல் ..."
"ஆம். இருந்தும், நான் யாரைச் சந்திக்கிறேன் என்ற செய்தி, புருஷோத்தமர்க்கு தெரிய வேண்டிய அவசியம் என்ன. இதனால் அவருக்கு என்ன நட்டம்?"
"நம் அனைவரின் நன்மைக்கக்காகவும் .." என்று அஜித் ஆரம்பித்தான். இந்த வாக்கு வாதம் மேலும் சில மணி நேரங்களுக்குத் தொடர்ந்தது.

மாலையில், மேனகாவுடன் இருக்கும் போது, மேனகாவே ஆரம்பித்தாள்."முற்பகலில் அஜித் சந்திரன் வந்தது போல் இருந்ததே. மறுபடியும் புருஷோத்தமனுடன் ஏதேனும் தகறாரா?". "ஆம். இந்த புருஷோத்தமனுக்கு என்னை ஏனோ பிடிக்கவில்லை. சென்ற முறை மாடுகளை கவர்ந்து வந்து விட்டேன் என்றார். மாடுகளை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன்? நான் ஏன் திருட வேண்டும்?". "பின்பு, அவைகளாகவா நடந்து வந்தன?" "மேனகா, அன்றே சந்தேகித்தேன். புருஷோத்தமன் வேண்டும் என்றே என்மேல் பழி போடுகிறான். இதனால் அவனுக்கு கிடைப்பது என்ன என்று தான் தெரியவில்லை. ஒரு வேளை அவனே கூட மாடுகளை இங்கே வந்து கட்டி இருக்கலாம்". "ஏன் வேறு யாரவது கூட உங்களுக்கு இடையில் பகையைக் கிளப்ப செய்யலாம் இல்லையா? நீங்கள் இன்னும் விழிப்போடு இருப்பது நல்லது." "சரி இன்று நடந்தது என்ன? சொல்லுங்கள்" என்றாள்.

அவளுடைய உடலைத் தழுவிக்கொண்டே முழுக் கதையையும் சொல்லி முடித்தான். "விஷ்ணுகுப்தரும் வந்திருந்தாரா?" "ஆம்". "கடைசி வரை எதுவும் பேசவில்லையா!" "ம். உன் ஆச்சர்யம் எனக்கு புரிகிறது. கடைசி வரை தம் கருத்தைக் கூறவும் இல்லை. விவாதத்தைக் கவனிக்கவும் தவற வில்லை. இந்த காரியத்தில் அவருக்கு உள்ள அக்கறை என்னைக் குழப்புகிறது." "நீங்கள் யோசிப்பது போல், எதுவும் இருக்காது. அவர் ஒரு உத்தமர். இந்த வகை சூழ்ச்சிகளில் ஈடுபட மாட்டார். அவருடைய கருத்தையும் நீங்கள் தெரிந்து கொள்வது நல்லது. மேலும் நீங்கள் மிகவும் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டிய காலம் இது. ஜாக்கிரதை"

பேசிக் கொண்டு இருக்கும் போதே, ஒரு கல் உள்ளே வந்து விழுந்தது. இல்லை எறியப்பட்டது. இந்த உருவத்தில் உள்ள கற்களை அம்பி இதற்கு முன் பார்த்திருக்கிறான். எங்கே என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போதே, மேனகா அவசரமாக பிடுங்கி வாசித்தாள். அதில் கண்டிருந்ததாவது "உடனே கிளம்பி வரவும்".

Tuesday, October 18, 2011

உடனே கிளம்பி வரவும் - 1

(சற்றே பெரிய சிறுகதை. உரையாடல்களில் வரும் பிற மொழிச் சொற்கள் வலிந்து தமிழ்ப்படுத்தப் பட்டுள்ளன)

"வந்தவர்களை வாழ வைக்க வேண்டாம். நட்புணர்வுடன் வருபவர்களை வாயில் வந்து வரவேற்கும் நல்லுணர்வையுமா இழந்து விட்டோம்? இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இனம், மொழி என்ற குறுகிய வட்டத்திற்குள் வாழப் போகிறோம். பரந்த மனதுடன் பாரபட்சமின்றி அனைவரையும் சரிசமமாக நடத்தும் போக்கு உலகம் எங்கும் வந்து விட்டப் பின்னும், நாம் மட்டும் இன்னும் ஏன் இந்த குட்டையில் உழன்று கொண்டிருக்கிறோம்? நம் எண்ணங்கள் ஏன் இன்னும் விசாலமாகவில்லை? கடவுளர்கள் கூட, நம்மவர்கள், அந்நியர்கள் என்ற பிளவு பார்ப்பதில்லையே? அற்ப மனிதர்கள் மட்டும் ஏன் இந்த பிரிவினை உணர்வுடன் கட்டுண்டு கிடக்கின்றோம்?"

"நீங்கள் நினைப்பதில் தவறென்று ஏதுமில்லை. உங்களைப் போன்று உயரிய கல்வி இங்கு யார்க்கும் வாய்க்கவில்லை. இது போன்ற நற்சிந்தனைகள், உங்கள் கல்வியினால் வாய்க்கப் பெற்றது. எனினும், திடீரென்று, உங்களுக்கு இந்த சிந்தனைகள் வரக் காரணமென்ன?". மேனகாவின் விழி கேட்கும் கேள்விக்கு, புருவங்கள் கேள்விக் குறியாகி நிற்பதை அம்பி பார்த்திருக்கிறான். அவள் மொழி கேட்கும் கேள்விக்கு, குறி எங்கு நிற்கும் எனத் துழாவினான். கேள்விக்குறி தொக்கி நின்றது. விடை திக்கி நின்றது.

நிச்சயம் இவை உயரிய சிந்தனைகள் தாம். ஆனால் உதித்தது, தன்னுள் அல்ல என்று அம்பி அறிந்திருந்தான் . மேனகாவின் விழிகளில் சந்தேக சாயல் படர்வதைக் கண்டதும், பேச்சை அத்துடன் நிறுத்திக் கொண்டு அவளிடம் இருந்து விடை பெற்றான். 'எந்த ஒரு புரட்சிகரமான செயலுக்கும், நிச்சயம் தடைகள் வரத்தான் செய்யும். வெற்றி பெற்றதன் பின், எஞ்சுவது புகழ் மட்டுமே. 'கூட்டுணர்வு ஒப்பந்தங்கள் நன்மை செய்வதற்காக மட்டுமே, சேர்ந்து வாழ அல்ல. உன் நலனை விட உன் குடும்ப நலனும், குடும்ப நலனை விட நாட்டு நலனும் முக்கியத்துவம் வாய்ந்தவை', இது இந்த நாடு இதுவரை கேட்டு அறியாத தத்துவங்கள் தாம். இத்தகு உயரிய எண்ணங்கள் கொண்டவன், நல்லவனாகத் தான் இருக்க வேண்டும். புருஷோத்தமன் போன்றவர்களுடன் கூடுவதைக் காட்டிலும், இவனுடன் நட்பாய் இருப்பது உயர்ந்தது' என்ற முடிவுக்கு வந்திருந்தான்.

நகரத்தின் மறு பகுதியில் இருந்த இந்த பரந்த பழமையான பல்கலைக்கழகத்தில் தான் அம்பி படித்து வருகிறான். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் விஷ்ணுகுப்தர் அப்பாவுக்கு நெருங்கியவர். கறுத்த தமிழ் பிராமணர். அம்பியின் அப்பா, பல்கலைக்கழகத்திற்கு நிறைய நன்கொடைகள் வழங்கியவர் என்ற பெயரில் இருவரும் பரஸ்பரம் நெருங்கியவர்கள் ஆயினர். பெரிய மனிதர்கள் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்வதில், பல்கலைக்கு நிறைந்த வருமானம் அல்லது அரசாங்க மானியங்கள் வருவதால், கணிசமான இடங்கள் அவர்களுக்கு வழங்கி, தேர்ந்ததோர் அரசியல்வாதியாகவும் ஆகியிருந்தார் விஷ்ணுகுப்தர்.

பல்கலைக்கழகத்தை வந்தடைந்த போது ஒரு செய்தி காத்துக்கொண்டிருந்தது. அப்பாவிடமிருந்து "உடனே கிளம்பி வரவும்".