Tuesday, October 19, 2010

பெயர் விகடன்

சங்கரன். என் அருமைத் தம்பி. காலையில் இருந்தே ஒரே கவனமாய் அவன் வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறான். வழக்கம் போலத்தான் என் உதாசீனம் செய்து விட முடியாதபடி இன்று அவன் வேலையில் விறுவிறுப்பு அதிகமாய் இருந்தது. காரணம் இது தான். இன்று என்னைப் பெண் பார்க்க வருகிறார்கள். முன்பே எல்லாம் பேசி முடித்தாகி விட்டது. இன்று சும்மா சம்ப்ரதாயமாகத்தான் வருகிறார்கள். மாப்பிள்ளை வீட்டார் நல்ல குடும்பம். மாப்பிள்ளையும் சங்கரனைப் போலவே சமையல் காண்டிராக்டர் தான். காப்பிடிக்கி மான்பிடி சன்ச்க்ருதம் கலந்து பேசும் பாலக்காட்டுத் தமிழ் குடும்பம். மாப்பிள்ளை பேரு? கேட்கலையே. பெயருன்னதும் ஞாபகம் வருது. என் பேர சொல்ல மறந்துட்டேனே.

பிறக்கும் போதும் ஏதும் இல்லாம பிறந்து, அப்புறம் கொஞ்ச நாள் சுசீக்குட்டி, கொஞ்ச வருஷம் கழிச்சு சுக்கா, இப்போ சில வருஷமா சுசீன்னு அழைக்கப் படுற சுசித்ரா. சுசீ, சுசீக்குட்டி எல்லாம் சரி, இது என்ன சுக்கா? அங்க தான் நம்ம ஹீரோ என்ட்ரி. அட.. சட்டுன்னு என்னை சந்தேகப் படாதீங்க. இது முழுக்க முழுக்க குடும்பக் கதைங்கரதால அந்த ஹீரோ சாட்சாத் என் தம்பி சங்கரனே தான். இதோ சிரிப்புன்னா என்னன்னே தெரியாம நிக்கிற இந்த சங்கரன் தான் ஹீரோவான்னு வேற ப்ளோக்குக்கு போயிடாதீங்க. நான் சொல்ற சங்கரனுக்கு வயசு நாலு தான். எப்பவும் சிரிப்பு. அப்போ அவன் எனக்கு வச்ச பேரு தான் சுக்கா. சுசித்ரா வாயில நுழையலேன்னு அவனா எனக்கு வச்ச பேரு. சரி பெரியவனானதும் மாத்திடுவான்னு நினைச்சா.. ம்ஹூம்.. அந்த பெயர் ஊர் முழுக்க பரவுனது தான் மிச்சம். ஒரே ஸ்கூல் வேறயா, என் பேரு சுக்கான்னே ஆயிடுச்சு.

"டேய். சுசித்ரா எப்படிடா சுக்காவாச்சு நோக்கு மாத்திரம்?" என்றேன் கோபமாக. "சுசீ+அக்கா= சுக்கா. இது கூட தெரியாதா? ." இந்தக் கேள்வி கேட்டப்போ அவனுக்கு எட்டு வயசு. இந்தப் பெயரைக் கேட்டப்பல்லாம் மாப்பிள்ளைமார் கடை வீச்சம் நாசி தொட்டு குமட்டும். குமட்டுவதுக்கு இது மட்டும் காரணம் இல்லை. இந்த பேரு குமற்ற மாதிரி இன்னொரு காரியமும் செஞ்சிருந்தான் இந்த வாலு. அது என்னனா..

"சுசீ.. தயாராயிட்டியோ? அவாளாம் வந்துட்டா". சில நிமிட பரபரப்புக்குப் பின், "புடிச்சுருக்கா?" அம்மா கேட்டாள். போட்டோ பார்த்தே சரி சொன்ன பின் தானே வந்தார்கள். பின் எப்படி பிடிக்காமல் போகும். ஏதோ சம்ப்ரதயமாக் கேள்வி. சம்ப்ரதாயமா தலையசைப்பு. அவ்வளவு தான். அவர்கள் பாட்டுக்கு எதோ பேசிக் கொண்டார்கள். அடுப்பங்கரையில் இருக்கும் அம்மாவுக்கும் எனக்கும் எதுவும் சரியாக் கேட்கவில்லை. அவர் பெயர் என்னவா இருக்கும்.

எல்லாப் பேருக்குள்ளேயும் விகடமா இன்னொரு பேரு தொக்கி நிக்கும்ங்கறது, சங்கரன் லாஜிக். சுக்கா மட்டும் இல்லை, இன்னும் பலவும் உண்டு. ரப்பர், உறுமி, ரசம் இப்படி. அவனுக்கு அஞ்சு வயசு இருக்கும் போது, இலஞ்சில ஒரு சத்திரத்தில நாங்க எல்லாரும் தங்கி இருந்தோம். அன்னைக்கு காலங்காத்தால ஒரு சுக்கு காபிக்காரன் வந்தான். "சுக்காபீஇ..." ன்னு வழக்கம் போல அளபெடுத்தான். இந்த வாலு இத பிடிச்சுன்னுட்டன். "பருப்பா(பெரியப்பா தான்.) சுக்கா பீ வேணுமா.. சூடா இருக்கு" . எல்லாருக்கும் சிரிச்சி சிரிச்சு வயிறு வலிச்சிருக்கணும். ஆனாலும் சுக்காபீய வயித்துல நிறைச்சுண்டு தான் கிளம்பினா. எல்லாருக்கும் இது மறந்துருக்கும் எனக்கு எப்படி மறக்கும். அஞ்சு வயசு குழந்தையா அவன் சிரிச்சது இன்னும் நினைப்பில இருக்கு.

அப்படி சிரிச்சவனா இப்படி. நல்லா தான் இருந்தோம். ஒரு நாள் திடீர்னு அப்பா சாகிற வரை. அன்னைக்குத் தான் அவன் சிரிப்பைத் தொலைச்சான். நாங்க படிப்பைத் தொலைச்சோம். நான் சுக்காவைத் தொலைச்சேன். கொள்ளி வச்ச கையோட கரண்டி எடுத்துட்டு சாசனம் மாமாவோட (சகஸ்ரநாமம் மாமா) கிளம்பிட்டான். அன்னையிலிருந்து இது வரை யாரும் சுக்கானு கூப்டல. இப்போ யாரவது கூப்பிடனும்னு தோன்றது. இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம், அப்புறம் பாலக்கட்டுக்கே போயிடுவேன். கல்யாணத்துக்கு அப்புறம் உள்ள பேரே போயிடும், இந்த பேரா நிக்கும்? நான் கேட்டு கூப்பிட்டதா இருக்கக் கூடாது. அவனா கூப்பிடணும். கூப்டுவானா?

அவங்க கிளம்ப ஆரம்பிச்சுட்டாங்க. எல்லாம் சுபம். எனக்கு என்னவோ சங்கரன் சிரிக்றதா தெரிஞ்சுது. அப்பா.. சங்கரன் சிரிக்கிறான். ஆனா முழுசா இல்ல. எனக்கு என்னவோ இன்னிக்கு அவன் இருக்கிற சந்தோசத்தப் பார்த்தா கொஞ்சம் முயற்சி பண்ணினாலே எல்லாம் கை கூடும்னு தோன்றது. சங்கரா.. சிரி.. சங்கரன் எல்லாம் பரிமாறினானே தவிர எதுவும் சாப்பிடவில்லை. இந்தக் காபியைக் கொண்டு போற சாக்கில் அவன் சிரிப்பதை கிட்ட இருந்து பார்த்து விடணும். கார் கிளம்பி விட்டது. என்னைப் பார்த்தான். சிரித்தான். சங்கரன் தானா? அந்த அரை குறை சிரிப்பல்ல இது. ஆத்மார்த்தமான சிரிப்பு. அவன் இழந்த சிரிப்பு அவனுக்கு திரும்ப கிடைத்து விட்டது. இழந்த படிப்பு கிடைக்கப் போவதில்லை. நான் இழந்தப் பெயர்?

"சுக்கா.. மாப்பிள்ளை பேர கேட்டியோ? கறிக்காரனாம்"