Sunday, January 10, 2010

எப்படி மறந்தாய்?

எப்படி மறந்தாய்? வசந்தி.. பத்தாம் வகுப்பு முடிய ஒன்றாக படித்தவள். நான் பத்தாம் வகுப்பு தேர்வில் தோற்றதும் சித்திக்கு பயந்து ஊரை விட்டு ஓடி வந்து ஏழு வருடங்கள் ஆகின்றன. வந்ததில் இருந்து விடுதி வாசம் தான். இரவு வேலை. காலை முழுவதும் உறங்கி விட்டு மதிய உணவுக்குப் பின் எங்காவது ஊர் சுற்ற செல்வது வழக்கம். மாலை விடுதி வந்ததும் வேலைக்குத் தயாராவதற்கு மட்டுமே நேரம் இருக்கும். இப்படி தான் ஐந்து வருடங்களுக்கு முன் மதிய உணவுக்குப் பின் நகர் வலம் சென்ற போது வசந்தியை மறுபடியும் சந்தித்தேன். எப்படி அவளிடம் பேசுவது? என்ன செய்கிறாய் என்று கேட்பாளே? தயங்கி நின்றேன். ஆனால் அவளே வந்து அறிமுகம் செய்து கொண்டு பேசினாள். அன்று முதல் அவளோடு மட்டுமே தனியே ஊர் சுற்றுவது என்று ஆகி விட்டது. முதலில் கடைத்தெரு, கோயில் என்று இருந்தது பின்னர் கடற்கரை, தியேட்டர் என்று மாறியது. இப்படி செல்லும் போது தெரிந்தவர்கள் யாரவது அவளோடு பார்த்துவிட்டால் என்ன செய்வது என்று பயம் இருந்தது. எனக்குத் தேறுதல் சொல்லி ஆற்றுப் படுத்தியதே அவள்தான். அவளா.. வேறு ஒருவனுடன் ஓடி விட்டாள்?

எப்படி மறந்தாய்? வசந்தி.. ஐந்து வருடங்களுக்கு முன் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து விட்டு நகரத்தில் உள்ள பிரபலமான் பெண்கள் கல்லூரி ஒன்றில் விடுதியில் தங்கி படித்து வந்தாள். அதன் பின் கே கே நகர் பஸ் டிப்போவை ஒட்டி செல்லும் சாலையில் பழைய மரப் பொருட்கள் விற்கும் கடைத் தெருவை கடந்து போனால் வரும் ஒரு சிறிய தெருவில் சில பெண்களுடன் தங்கி இருந்தாள். அங்கிருந்து அவள் அலுவலகம் மிக அருகில். நன்றாக சம்பாதித்தாள். என்னை வேலையை விட்டுவிடும் படியும் அவளே என்னைப் பார்த்துக்கொள்வாள் என்றும் கூறினாள். ஒரு பெண்ணை நம்பி செல்வதா? தவிர அவளுடன் வெளியில் செல்லவே யோசிக்கும் நான் அவளுடன் தங்கினால்? அவளைப் பற்றி என்ன நினைப்பார்கள்? சமூகம் என்ன பேசும்? அவள் நேற்றிரவே அவனுடன் ஓடி விட்டாளாம். அவளைப் பெற்றவர்கள் இந்நேரம் அவளைத் தேடிக் கொண்டு இருப்பார்கள். நிச்சயம் என்னைப் பற்றியும் விசாரிப்பார்கள். அவர்கள் கண்ணில் படுவதற்குள் சென்று விட வேண்டியது தான். டிப்போவில் காத்து நிற்காமல் உதயம் தியேட்டர் நிறுத்தத்துக்கு நடக்க ஆரம்பித்தேன்.

எப்படி மறந்தாய்? என்னைக் கை விடமாட்டேன் என்று சொன்ன சொல்லை எப்படி மறந்தாய்? மரீனா செல்லும் ஒரு பேருந்து கூட்டத்துடன் வந்தது. எவனோ ஒருவன் "ஏய் வரியா? என்ன ரேட்டு?" என் பின்னல் நின்ற பெண் கூனிக் குறுகி நின்றாள். இன்று முடியாது .. இதே வேறு ஒரு நாளாக இருந்தால்.. அந்தப் பெண் பேருந்தில் ஏறிக் கொண்டாள், அவளைத் தொடர்ந்து நானும் ஏறிக் கொண்டேன். கூட்டம் அதிகம் தான். இடி மன்னர்கள் குதூகலித்துக் கொண்டு இருந்தார்கள். அந்தப் பெண்ணை இப்பொழுது வேறு ஒருவன் பின்புறம் ஒட்டி நின்று உரசிக் கொண்டு இருந்தான். அவள் மேலும் குறுகினாள். வசந்தியின் ஞாபகம் வந்தது. இப்படி தான் பேருந்தில் செல்லும் போதெல்லாம் கூசிப் போவாள். அந்த நேரத்தில் எல்லாம் அவளை என் அணைப்பில் கொண்டு வந்து.... அவன் எல்லை மீறினான். நான் அந்த பெண்ணின் பின்னால் அவனை தள்ளி விட்டு விட்டு நின்று கொண்டேன். வேண்டுமானால் என்னை உரசிக் கொள்ளட்டும். என்னைப் பார்த்ததும் சிரித்தபடியே ஒன்றுமே தெரியாதவன் போல் விலகிக் கொண்டான்.

எப்படி மறந்தாய்? எத்தனை முறை அந்தக் கயவர்களிடம் இருந்து உன்னை அரவணைத்துக் காத்தேன்? என்னை அரவணைக்க மட்டும் எப்படி மறந்தாய்? '.................' ரயில் நிலையத்திற்கு இடது புறம் உள்ள சாலையில் மூன்றாவது சந்து இளைஞர்களிடம் வெகு பிரபலம். நகரத்தின் பெரிய சிவப்பு விளக்கு பகுதிகளில் இதுவும் ஒன்று. கால் போன போக்கில் அனிச்சையாக அந்த சந்தில் நுழைந்த போது மணி ஐந்து. புரோக்கர்கள் அப்பாயின்மென்ட் பிக்ஸ் செய்ய அவசர கதியில் அலைந்து கொண்டு இருந்தார்கள். தெரு முனையில் மாருதிகள் ஒவ்வொன்றாக வந்து கொண்டு இருந்தன. ஒரு சிலர் "தொழில்" ஆரம்பிக்கும் முன்னே நோட்டம் விட்டுக் கொண்டு இருந்தனர். ஆறு மணிக்கெல்லாம் கூட்டம் அலைமோதும். இங்கு தான் கவிதா இருக்கிறாள் . எல்லாம் 'தொழில் முறைப் பழக்கம்' தான். வசந்தி இல்லை என்று ஆனதும் பல நாட்கள் காணமல் இருந்த இவளைத் தேடிக் கால்கள் வந்து விட்டன. பழக்கமான புரோக்கர் ஒருவன் பல்லிளித்தான். "எதாச்சும் வேணும்னா.." என்று இழுத்தான். "இல்ல வேண்டாம்" என்று சொல்லிய படியே அந்த வீட்டுக்குள் நுழைந்தேன். பழக்கமான 'ஆள்' என்பதால் யாரும் தடுக்க வில்லை. கவிதா எதிரில் வந்தாள். "வாசு நீயா? நீ வருவேன்னு தெரிஞ்சிருந்தா புரோகிராம கான்சல் பண்ண சொல்லி இருப்பேனே? கை நீட்டி காசு வாங்கியாச்சு.. வெளியே வேன் நிக்குது..இப்போ முடியாது.. உள்ளே அனிதா இருக்கிறா.. அவகிட்ட கேட்குறியா?" .. 'அனிதாவா? அவ எப்போ இங்கே வந்தா?'.. கவிதா போய் இருந்தாள்.

எப்படி மறந்தாய்? நீ விட்டு சென்றால் நான் இந்தக் குழியில் தான் விழுந்து கிடப்பேன் என்று தெரிந்தும் ஏன் என்னை விட்டுச் சென்றாய்? அனிதாவும் அவசரம் அவசரமாய் தயார் ஆகிக் கொண்டு இருந்தாள். "வா வாசு.. இன்னிக்கும் வேலைக்கு போகலியா? உன் க்ளோஸ் பிரண்டு ஆனந்து ரெண்டு நாளா என் கூட தான் சுத்திட்டு இருக்கான். அவன் தான் சொன்னான். இன்னிக்கும் அவனோட ப்ரோக்ராம் தான்." ஆனந்துக்கு ஒரு நாள் கூட பெண்கள் இல்லாமல் இருக்க முடியாது. "நீ இரேன். நான் ராத்திரிக்குள் வந்துடறேன்." அவள் பறந்து விட்டாள். அறையில் யாரும் இல்லை. வாய் விட்டு அழ வேண்டும் என்று தோன்றியது.. அழுதேன்.."எனக்கு இதில் இருந்து விமோசனமே கிடையாதா? வசந்தி இந்த வேலையை விட்டு உன்னுடனே வந்து வேறு வேலை செய்து பிழைக்கலாம் என்று இருந்தேனே? என்னைப் பற்றி எண்ணாமல்.." செல் அழைத்தது. எடுத்தேன்.. "இன்னியோட மூணு நாள் ஆறது.. நாளைக்கு பார்க்கலாமே.." இந்த மூன்று நாள் மட்டும் தான் விடுதலை. அதுவும் நானாக எடுத்தால் தான் ஆயிற்று.

'நான் வாசு என்கின்ற வசுமதி'.

3 comments:

  1. எனக்கு சில விடயங்கள் புரியவில்லை . இருப்பினும் சிக்கலில் உழலும் ஒரு பெண்ணின் கதை என்பது புரிகிறது. நட்புடன் நிலாமதி அக்கா .

    ReplyDelete
  2. கதை புரியாதவர்களுக்காக,
    ஆணாக பாவித்து முதல் முறை வாசிக்கவும், கடைசி வரிகளுக்குப் பின் பெண்ணாகப் புரிந்து மறுபடியும் ஒரு முறை வாசிக்கவும். புரிந்துவிடும் எனநினைக்கிறேன்.

    ReplyDelete