Wednesday, January 27, 2010

கழுத்தையும் அறுத்துக் கொண்டாயிற்று

என் பெயர் வீரபத்திரன். வரைபடத்தில் தேடினாலும் கிடைக்காத மிகச் சிறிய தேசமான திறந்த-மண்ணின் மாபெரும் சைனியத்தில் ஒரு சாதாரண படைவீரன். களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே என்ற புறநானூற்றின் வரிகளுக்கு ஏற்ப சிறு வயது முதலே சைனியத்தில் சேரவேண்டும் என்ற அவா நிறைவேறியது என்னவோ நான்கு வருடங்களுக்கு முன்பு. மன்னரின் கீழ் பாதுகாப்பு அமைச்சர், அவர் கீழ் படைத் தலைவர்கள், அவர்கள் கீழ் படைவீரர்கள் என்ற எளிமையான கட்டமைப்பு கொண்டது சைனியம். எப்பொழுதும் ஏதாவது போர் என்று ஒரு பொழுதும் சைனியம் நிலையாக தலைநகரில் நின்றதில்லை. எப்பொழுதும் போர் என்பதாலோ என்னவோ படை வீரர்கள் களைத்துக் காணப்பட்டார்கள், பெரும்பாலானவர்கள் விழுப்புண்கள் என்று பெருமை கூறிக் கொள்ள முடியாத அளவுக்கு சீழ் கட்டிய புண்களுடன் வாழ்ந்து வந்தார்கள். சைனியத்தில் சேர்ந்த முதல் இரண்டு வருடங்களில் கூதிர் காலத்து மாமழை நிறைய வீரர்களைக் காவு கொண்டது. புண்கள் புரையோடி, சுரம் கண்டு நோய் கொடுமையால் ஏதேதோ பிதற்றிக் கொண்டு தம் உயிரை மாய்த்துக் கொண்டனர். நகரெல்லாம் பெருமையாகப் பேசும் சைனியத்தில் வீரர்களின் உயிருக்கு ஒரு மதிப்பில்லையா?

இந்த எண்ணம் தோன்றியதும் பாதுகாப்பு அமைச்சர் முன்னால் நின்றேன். "அடியேன் தெண்டம். பயிர் வளம் காண வந்த மழை உயிர் வளம் கவர்தல் என்ன முறையோ? சீழ்ப்பட்ட புண், சுரம் கண்டு வீரர்கள் வீழ்தல் முறையோ? ஓய்வும் மருந்தும் பேருயிர் உய்விக்கும் என அறிந்தார் இலரோ?" எனக் கேட்டேன். "வந்தார் செல்வதும், புதியோர் புகுதலும் உலக நியதி என அறியா சிறு குழந்தாய் கேள். நோய்க்கு வழி மருந்தல்ல காண், உளத்தீரம்" என்றார். இளம் கன்று பயம் அறியாது என்பார்களே, அது உண்மை தான் யாரும் உரைக்கத் தயங்கும் உரை ஒன்று உரைத்தேன். "படை நிலை கண்டு வருந்தா, உடைப் பொருள் ஒன்றே குறியாக் கொண்டது தான் அமைச்சா? வழி நடத்தும் பெரியோர் இன்றி கழி நிலைப் படை வாகை சூடும் வழி எது உரைப்பீர்". "மூடனே! படை நடத்தல் பற்றி பாடம் புகலுவையோ? புண் கொண்டு வாழ்தல் அரிதா? இதோ உன் கை விரல்கள் துண்டித்தேன். வீழ்வையோ வாழ்வையோ யானே கண் கொண்டு காண்கிறேன். போ"

என் கை விரல்கள் இரண்டை இழந்த பின், அமைச்சரிடம் பேசும் துணிவை இழந்திருந்தேன். அமைச்சர் தான் இப்படி, ஆனால் மன்னர் மிகவும் நல்லவர். நாடு நகரங்கள் எல்லாம் பஞ்சத்தால் வாடி பெரிய பெரிய நாடுகளில் எல்லாம் மக்கள் மடியும் போது, எம்மன்னர் கஞ்சித் தொட்டி திறந்து பஞ்சம் போக்கினார். அந்த வருடம் எம்மண்ணில் கூதிரும் இல்லை கூற்றுவனும் இல்லை. வட திசைப் போரில் படைத்தலைவர் மாராயர் வழி நடத்த சென்ற ஒரு சிறு சைனியத்தில் அவருக்கு அடுத்த நிலையில் இருந்து படை நடத்தினேன். மாரயரின் படையில் இது காறும் மும்முறை இடம் பெற்றுள்ளேன். போர்க்களப் பயிற்சியில் அவரே என் குரு. அந்த வயதிலும் அவர் வாள் வீசும் வேகத்தைக் கண்டால் பேடியும் "வாள் வாள் " என்று கத்துவான். நான் அவர் மீது கொண்டது பக்தி என்றால் அவர் என் மீது கொண்டது நம்பிக்கை. எனக்கும் அமைச்சருக்கும் இடையே இருந்த பிரச்சினை குறித்து தோராயமாக அறிந்து வைத்திருந்த அவர் ஓரளவு சமரச முயற்சியிலும் ஈடுபட்டிருப்பார் என நினைக்கிறேன். வடதிசை நாட்டின் படைபலம் பற்றி அறிய வேவு பார்க்க சென்ற போது என்னையும் உடன் அழைத்துச் சென்றவர் என்ன காரணத்தாலோ ஐந்தே நாட்களில் திரும்பி விட்டார். நான் தனியனாக ஒரு திங்கள் ஒற்றனாகப் பணி முடிந்து திரும்பிய நேரம் அனைத்தும் மாறி இருந்தது.

பாதுகாப்பு அமைச்சர் கொலை செய்யப்பட்டு இருந்தார். யார் காரணம் எனத் தெரியவில்லை. குழப்பங்கள் நிறைந்த இந்த தருணத்தில் தான் பலரும் நகர் நோக்கி படை கொண்டு வந்தனர். அவசர நிலையில் மன்னர் நகரமாதண்ட நாயகரை பாதுகாப்பு அமைச்சராக நியமனம் செய்தார். இந்த முடிவில் படைத்தலைவர்களுக்கு குறிப்பாக மாராயருக்கு ஏனோ உடன்பாடு இல்லை. ஏதோ நடக்கக் கூடாதது நடந்து விட்டதாக எண்ணினார். எனக்கு பாதுகாப்பு அமைச்சரைப் பிடிக்காது என்றாலும் அவர் சாக வேண்டும் என எண்ணியதில்லை. ஏனெனில் அவர் படை நடத்தும் திறம் எவருக்கும் வராது. ஆனால் புதியவர் அவரினும் வல்லவராகவும் நல்லவராகவும் இருந்தால் என்ற எண்ணம் நம்பிக்கை அளித்தது. வடதிசைப் போர் வலுவாக இருந்ததால் மாரயரும் நானும் போர்க்களத்தில் மட்டுமே சிந்தை கொண்டோம்.

இந்த நேரத்தில் தான் என் தாயின் உடல் நிலை சரி இல்லை என்ற செய்து வந்தது. ஊருக்கு செல்ல வேண்டும் என்று மாராயரிடம் விடுப்பு கேட்ட போது, போரைச் சீக்கிரம் முடித்து விடுவோம், சற்று பொறுத்துக்கொள். அதன் பின் எவ்வளவு நாள் வேண்டுமோ எடுத்துக்கொள். நீ இல்லாமல் படை நடத்துவது கடினம் என்று சமாதானம் கூறினார். ஐந்து மாதங்களுக்குப் பின் போர் இன்னும் ஐந்து நாட்களில் முடியும் என்று தோன்றியது. இந்த சமயத்தில் தான் என் தாயின் உடல் நிலை இன்னும் மோசமாகி விட்டது என்ற செய்தி வந்தது. போர் முடிந்து விடும் என்று நிச்சயம் ஏற்பட்டதால் மாராயரிடம் சென்று அன்றிரவே ஊருக்கு செல்கிறேன் என்று கூறிவிட்டு கிளம்புவதற்கான ஆயத்தங்களைச் செய்தேன். அப்பொழுது வந்த வீரன் ஒருவன் மாராயர் அழைக்கின்றார் என்றான். நான் அவர் கூடாரத்திற்குள் சென்ற போது மாராயர் என்னையே வெறித்து நோக்கிக் கொண்டு இருந்தார். என்னை வீரர்கள் சூழ்ந்து கொண்டனர், என் உடலில் பல்வேறு பகுதிகளில் கத்தி இறங்கியது. நான் மூர்ச்சையுற்றேன்.

நான் விடுமுறையில் வந்து ஒரு மாத காலம் ஆகி இருந்தது. நான் வந்த சில நாட்களில் என்னைக் கண்ட சந்தோசத்திலேயே என் தாய் உடல் நலம் தேறியிருந்தாள். ஆனால் என் உடலில் விழுந்த கத்திக் குத்துக் காயங்கள் எதுவும் ஆறவில்லை. மருந்தே நுழையாத தேசம் ஆயிற்றே திறந்த-மண். அந்த சமயத்தில் தான் குணதிசையில் படை நடத்திச் செல்ல தகுந்த வீரன் வேண்டும் என என்னை அழைத்தனர். இம்முறை படைத் தலைவர் வல்லவரையர். வடதிசைப் போர் வெற்றிக்குப் பின் மாராயர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. அவரை சந்திக்கச் சென்ற போது அவர் ஓய்வில் இருப்பதாகக் கூறி என்னை சந்திக்க அனுமதிக்க வில்லை. வட திசைப் போரில் என் சாகசங்களைக் கேள்வியுற்ற வல்லவரையர் என் மீது மிகுந்த எதிர்பார்ப்பு கொண்டு இருந்தார். பட்ட காயங்கள் அவ்வப்பொழுது உறுத்திக் கொண்டு இருந்தாலும் குனதிசைப் போரில் என் பங்கு திருப்தி கரமாகவே இருந்தது. அனுபவமிக்க படை வீரன் என்பதால் வீரர்களும் என் கட்டளைக்கு அடி பணிந்து மேலும் மேலும் வெற்றியைச் சேர்த்தனர். இந்த சமயத்தில் தான் மாராயரிடம் இருந்து அழைப்பு வந்தது. நான் செண்ட போழ்து அவர் தன இறுதி மூச்சை இழுத்துக் கொண்டுஇருந்தார். அவர் உடல் எங்கும் காயங்கள் புரையோடி இருந்தன. என்னை அருகே அழைத்து என் காதில் "நீ மடிந்தனை என கருதுற்றேன். இம்மண் உன் வல்லன்மைக்கு ஒப்பது அன்று " என்றார். நானோ "சீரிய தொண்டிற்கு சீரும் சிறப்பும் பலன்களாம்" என்றேன். என்னைப் பார்த்து புண் முறுவல் செய்தார். மறு கணம் அவர் உயிர் பிரிந்தது.

அவருக்கு என்ன நேர்ந்தது என்று வல்லவரயரிடம் வினவிய போது அவர் சாவிற்கு அவரே காரணம். மேல் திசைப் போரில் அவரின் செயல் பாடுகள் குறித்து மாதண்ட நாயகம் மன்னரிடம் அத்ருப்தி தெரிவித்து இருக்கிறார். மாரயரின் திறன் அறிந்த பாதுகாப்பு அமைச்சரோ, மாராயருக்கு ஆதரவாக பேசியதோடு அல்லாமல் தண்ட நாயகரைப் பழித்தும் பேசிவிட்டார். மன்னரிடம் அதிக செல்வாக்கு கொண்ட தண்ட நாயகரைப் பழித்ததே இவ்விருவரின் அழிவுக்குக் காரணம். "அப்படி என்றால் இவ்விருவரின் மரணத்திற்கும் தண்டநாயகர் தான் காரணமா?". "தெரியவில்லை. எதற்கும் ருசு வேண்டும் அல்லவா?". அந்த வருடத்திய கூதிர் வந்தது. என் உடல் நிலை மோசமாகியது. காயங்கள் சீழ் கோர்த்தன. வலியில் ஏதேதோ உளறினேன். நோய்வாய்ப்பட்ட முதியவர்களின் நிலைக்கு ஆளானேன். என் உயிரைக் காக்குமாறு கெஞ்சினேன், அதட்டினேன். வல்லவரயரையும் விட்டு வைக்க வில்லை. அவர் எனக்கு புத்தி பேதலித்து விட்டது என்றார். நான் செத்தாலாவது எனக்கு பதில் ஒரு படை வீரனை பெற்றுக்கொள்ளலாம் என என் காது படவே பேசினார். நானும் என்னைக் கருணைக் கொலை செய்து விடும்படி கெஞ்சினேன். ஜீவகாருண்யம் பேசி மறுத்து விட்டார். எங்கு சென்றாலும் என்னை வீரர்கள் தூக்கிச் செல்வது என்ற நிலைக்கு என் நிலை மோசமாகியது. ஆயினும் என் வீரர்கள் என் உத்தரவைக் கேட்டு அதன்படி நடந்து வெற்றியைச் சேர்த்துக்கொண்டே இருந்தனர். இதுவும் வல்லவரையர் என்னைக் கொல்லாததற்குக் காரணமாகவும் இருக்கலாம். ஆனால் சமீப காலமாக என் நினைவு தப்பி விடுகிறது. அந்நேரம் சரியான வழிநடத்தல் இன்றி படை சேதமுறுகிறது. அவர்களின் சேதத்திற்கு நானும் ஒரு காரணம் என்ற குற்ற உணர்வு உறுத்துகிறது. எனக்கு உயிர் பிழைப்பேன் என்ற நம்பிக்கை அற்று விட்டது. இந்தப் போரை முடித்து உயிரை மாய்க்கலாம் அல்லது ஒய்வு எடுக்கலாம் என நம்பி இருந்தேன். ஆனால் அவ்வப்பொழுது தப்பும் நினைவு நான் போர் முடியும் வரை தாங்க மாட்டேன் என்று என்ன வைத்து விட்டது. இறந்து போன மாராயர் வேறு அவ்வபொழுது வந்து, 'வந்து விடு வந்து விடு' என்று அழைக்கிறார். அதான் இந்த முடிவு. என் உயிரை மாய்க்கப் போகிறேன். எனக்குப் பதில் வல்லவரையர் ஒரு தகுதிவாய்ந்த வீரனைத் தருவித்துக்கொள்வார். "இதோ வந்து விடுகிறேன் மாராயரே." கூர்வாள் கொண்டு என் கழுத்தை அறுத்துக் கொள்கிறேன்.

கதையைப் படித்து முடித்தப் பின் "என்ன இது? எதற்கு இந்த கதை?"என்றார் மானேஜர். "இதோ இந்த கடிதத்தையும் படித்து விடுங்கள். என் ராஜினாமா கடிதம்". "ஏன்?". "இந்தக் கதையில் வரும் வீரபத்திரன் நான் தான். அந்தக் கூர்வாள் உங்கள் கையில் உள்ள கடிதம்". மறுபடியும் இந்தக் கதையைப் படித்தார். படித்து விட்டு "மன்னரிடம் பேசவா?"

"வேண்டாம். தேவைப் படாது. கழுத்தையும் அறுத்துக் கொண்டாயிற்று".

No comments:

Post a Comment