Wednesday, November 16, 2011

கரியன் - 1

கங்கைகொண்டானின் கரிசல் மண்ணில் கதிரவன் கால் பதிக்கும் சில நாழிகைக்கு முன்னதாக, காளைகள் பூட்டிய வண்டியொன்று, பருத்தி பொதிகளுடன் ஊரை விட்டு வெளியேறி திருநெல்வேலி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தது. திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் ரயில்கள் எல்லாம் நின்று செல்லும் நிலையங்களில் கங்கைகொண்டானும் ஒன்று. திருநெல்வேலியையும் மதுரையையும் இணைக்கும் பிரதான சாலையிலோ அல்லது திருநெல்வேலியையும் தூத்துக்குடியையும் இணைக்கும் பிரதான சாலையிலோ கங்கைகொண்டான் அமையவில்லை. பின் ஏன் ரயில் தடம் மட்டும் அவ்வழியே உள்ள, நாரைக்கிணறு, கங்கை கொண்டான், மணியாச்சி வழியே செல்ல வேண்டும்? காரணம் அந்த கரிசல் பூமியின், பருத்தி வளம். இந்த சிறு கிராமங்களில் விளையும் பருத்தியை கொள்முதல் செய்து துறைமுக நகரங்களுக்கு அனுப்பி வைப்பதற்காகவே இந்த வழித்தடத்தை ஆங்கிலேயர்கள் பயன்படுத்தினர். நகரங்களில் கிடைக்கும் விலையை விடக் குறைவான விலையிலேயே பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது.

முத்தையன், வண்டியை விடியும் முன் திருநெல்வேலி சந்தையில் சேர்த்து விட வேண்டும் என்று காளைகளை விரட்டிக் கொண்டிருந்தான். முத்தையனுக்கு வயது இருபதுகளின் ஆரம்பத்தில் இருக்கலாம். குழைத்த களிமண் போன்ற நிறம். எடுப்பான காதுகள், உடலின் நிறத்திற்கு ஒவ்வாத நிறத்தில் கண்கள். நெற்றியின் இரு புறத்திலும் ஏறிய தலைமுடி, தீபகற்ப இந்துஸ்தானத்தின் வடிவில் இருந்தது. வண்டி நகருக்குள் நுழையும் போது விடிந்திருந்தது.

"வண்டியில என்ன?"
"பருத்தி பொதியிங்க எசமான். ஊரில விளைஞ்சது, சந்தைல நல்லா விலை போகுமுன்னு கொண்டாந்தேன்"
"எந்த ஊரு?"
"கங்கை கொண்டான்"
"அப்போ நல்ல பருத்தி தான். நல்ல விலை கிடைக்கும், ஆனா இந்த சின்னக் கோனான் கண்ணில மட்டும் பட்டிராதே. ஆமா உன் பேரு என்ன?"
"முத்தையன்."
"முத்தையன்.... ?"
"....."
"ஓ.. சொல்லக் கூடாத இனமோ.. போ போ ?"

முத்தையன் ஒரு எண்ணெய்க் கடைக்கு எதிரில் இருந்த நிலத்தில் மூடைகளை அடுக்கி கடை பரப்பினான். சிறிது நேரத்தில், அரசாங்க அதிகாரி போல் தோற்றம் கொண்ட ஒருவன் வந்து மூடைகளை நோட்டம் விட்டான். இருவரும் பேரத்தில் இறங்கினர்.
"அந்த வெலை ஆகாது எசமான். இந்த விலைக்கு தொரைமாருங்க கிட்டயே விட்டுருப்பேனே"
"அட.. உன் பஞ்சு இதுக்கு மேல பெறாது. துரைக்கு தெரியாத பருத்தி ரகமா?"
"இது நயம் பருத்தி. சீமை முழுக்க தேடினாலும் இந்த மாதிரி கிடைக்காது"
"இந்த விலைக்கு தந்தா வாங்குறேன். இல்லை போய்ட்டே இருக்கேன்" என்று சொன்னவன் சென்று எண்ணெய்க் கடையில் போய் உட்கார்ந்து கொண்டான்.

சற்று நேரத்தில் இரு காவலர்கள் வந்தார்கள்.
"என்னடா விக்கிறே?"
"பருத்திங்க"
"அது தெரியிது. இது என்ன?"
"எலிங்க. வீட்டில வளர்த்தது, அதுவும் விக்கத்தான்"
"நெல்லு வெளையுற ஊரு இது. எலிக்கறி யாரு வாங்குவா? அது சரி, இங்க கடை போட அனுமதி வாங்கினியா?"
"இல்லைங்க."
"அப்போ கிளம்பு. எந்திரி.."

அதற்குள், எண்ணெய்க் கடையில் இருந்த அதிகாரி அவர்களை கூப்பிட்டு ஏதோ சொன்னார். அவர்கள் அவனை விட்டு நகர்ந்து சென்றார்கள். ஆனால் அந்த அவன் மேல் ஒரு கண் வைத்தபடி வட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள்.
உச்சி வரை, வந்த வியாபாரிகள் எல்லாம் வெறும் பேரத்துடன் முடித்துக் கொண்டனர். கொண்டு வந்திருந்த கஞ்சியை குடித்து விட்டு, சிறிது நேரம் உறங்க ஆரம்பித்தான். அதிகாரி, கிளம்பி வெளியே சென்றிருந்தார். தூங்கிக் கொண்டிருந்தவனை ஒருவர் எழுப்பி, நல்ல விலையில் வாங்கிக் கொள்வதாகச் சொன்னார். ஆனால் அதற்குள், அந்த இரு காவலர்கள், எண்ணெய்க் கடையைக் காட்டி ஏதோ சொல்லவே அவரும் எதுவும் சொல்லாமல் கிளம்பிக் கொண்டார்.

சிறிது நேரத்தில் அதிகாரி வந்தார். மேலும் சிலர் கடைக்கு வந்து வந்து சென்று கொண்டிருந்தனர். எதிர்க் கடையில் இருந்த அதிகாரியைக் கண்டு நகர்ந்து சென்று விட்டனர். இதற்க்கு மேல் எதுவும் விற்காது என்று தெரிந்து, அதிகாரியிடமே சென்று விற்பதாக கூறினான்.

"சரி. அந்த வண்டியில மூட்டையை ஏத்து. தொரை வந்து பணம் கொடுப்பார்"

"ஏய்.. எங்களுக்கு தெரியாம எப்படே எலிங்கள வித்தே. யாருடே வாங்கினா?" என்று கேட்டுக் கொண்டே அந்த இரு காவலர்களும் உதவ முன் வந்தார்கள்.
"வேண்டாம். நானே ஏத்தி வச்சிருதேன்." என்று மறுத்து விட்டான்.

ஒவ்வொரு மூடையிலும் ஒரு லத்தி நுழையும் அளவு ஒரு துளை இட்டு, குப்புற அந்த மூடைகளை அவன் ஏற்றுவதைக் கண்டு விட்ட அவர்கள்,
"இந்த ஓட்டையில, சிந்துற பஞ்சிலையா எங்க தொரை நஷ்டமாவப் போறாரு!" என்று சிரித்துக் கொண்டார்கள்.

"வெல்டன் சின்ன கோனார்.. " என்றபடி துரை அந்த அதிகாரியைத் தட்டிக் கொடுத்தார். முத்தையன் இருவரையும் அமானுஷ்யமாக வெறித்துக் கொண்டிருந்தான்.

(அடுத்த பகுதியில் கரியன் வந்து நிறைவு செய்வான்)

No comments:

Post a Comment