Tuesday, November 1, 2011

கம்பன் வீட்டு கட்டுத் தறி

"சினோரே! சினோரே! சீக்கிரம் எழுந்திருங்கள். உங்களிடம் ஒரு முக்கிய உதவிக்காக வந்துள்ளேன். எங்கள் பிரச்சனைகளை நீங்கள் மட்டுமே தீர்க்க முடியும். எழுந்திருங்கள்". சினோரே என்று விளிக்கப்பட்ட அந்த மனிதர் எழுந்து, தன்னை எழுப்பிய உருவத்தை நன்கு ஆராய்ந்தார். இளம் பச்சை நிறத்தில் செடி போன்ற உடலமைப்பைக் கொண்டிருந்த அந்த உருவத்திடம் "நீ யார்? உங்களது பிரச்சனை என்ன?" என்றார்.

"சினோரே! நாங்களும் எங்கள் வம்சத்தவரும் பன்னெடுங்காலமாக வாழ்ந்து வரும் எங்கள் பூர்விக இடத்தை எம்மிடம் மீட்டுத் தரக் கோரி உங்களிடம் வந்துள்ளேன்." செடியின் தண்டு போலிருந்த உடலமைப்பையும், கொத்து கொத்தாக இருக்கும் இலைக் கூட்டங்கள் போன்ற பசுமை வர்ணத் தலையும் கொண்ட உருவத்தையும் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்த அவர், "நீங்கள் எங்கே இருக்கிறீர்கள். யார் நீங்கள்? கொஞ்சம் விளக்கமாக கூறு" என்றார்.

"நாங்கள் வசித்து வந்த இடம், எங்களைப் போலவே பசுமையான குளுமையான இடம். பல தலைமுறைகளாக, இருந்த இடத்திலேயே உணவு, சுவாசிக்க காற்று என எங்களுக்கு தேவையான யாவும் கிடைத்ததால், நிலத்திலேயே காலூன்றி வாழ்ந்து வந்தோம்." 'இவைகள் செடிகள் தாம். வேர்களைக் கால்கள் என்கின்றன' என்று உறுதி படுத்திக்கொண்டார். அது மேலும் தொடர்ந்தது, "இவ்வாறு பல காலம் செழிப்பாக வாழ்ந்து வந்த எங்களுக்கும் ஒரு கெட்ட காலம் வந்தது. வசதி வாய்ப்புகளின் காரணமாக எங்களின் மக்கட்தொகை, கணக்கில் அடங்காமல் பெருகிற்று. எங்களுக்கு என்று இருந்த நிலப் பகுதி போதாமல் போக ஆரம்பித்தது. ஆயினும் நாங்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் வழமை இல்லாமையால், இருந்த நிலத்தில் நெருங்கி வாழ்ந்து வந்தோம். ஒரு கட்டத்தில், இடப் பற்றாக்குறையால் எங்களில் சிலர் எங்கள் கால்களை நிலத்தில் இருந்து விடுவித்துக் கொண்டு மிதக்க ஆரம்பித்தனர். அது வரை, நிலத்தில் கால் புதைத்தே வாழ்ந்து பழகிய அவர்களுக்கு, நிலத்தில் கால் புதையாமலும் வாழ முடியும் என்ற நம்பிக்கை வந்தது. இவ்வாறாக எங்களின் மிகப் பெரிய பிரச்சனையான இடப்பற்றாகுறைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தோம்." 'என்ன? செடிகள் நிலத்தில் இருந்து விடுபட்டு உயிருடன் வாழ முடியுமா? அதிசயமாக அல்லவா இருக்கிறது!' "சரி. உங்கள் பிரச்சனைகளைத் தான் நீங்களே தீர்த்துக் கொண்டாயிற்றே. நான் என்ன செய்ய வேண்டும்?" என்றார்.

"சினோரே! எங்கள் தலையாய பிரச்சனை அதன் பின் தான் ஆரம்பித்தது. எங்கள் உலகத்தில், உங்கள் உலகம் போல் இல்லாமல், மூன்று நிலவுகள் உண்டு. ஒன்று தங்க நிறத்திலும், ஒன்று வெள்ளி நிறத்திலும், மற்றொன்று கரு நிறத்திலும் இருக்கும். வெளியில் இருந்து கிடைக்கும் வெளிச்சம் எங்கள் உணவு தயாரிப்புக்கு போதுமானதாக மட்டுமே இருந்து வந்தது. உங்கள் உலகில் வரும், அமாவாசை, பௌர்ணமி போல் நிலவுகள் வருவதும் போவதும் உண்டு. பௌர்ணமியின் போது, எங்கள் நிலவுகள் ஜொலிப்பதை நாங்கள் கண்கொட்டாமல் ரசித்து வந்தோம். எங்கள் நிலவுகளில் மூன்று வண்ணங்கள் உள்ளமையால், எங்கள் பௌர்ணமி உங்களுடயதைக் காட்டிலும் ரம்மியமாக இருக்கும். எங்கள் கருப்பு பௌர்ணமி, உங்களவர்கள் இதுவரைக் கண்டிராத ஒன்று. உங்கள் அளவுக்கு வான சாஸ்திர அறிவு எம்மவர்களுக்கு இல்லையா? அல்லது எங்கள் நிலவுகள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வருவதில்லையா எனத் தெரியவில்லை. எத்தனை காலத்திற்கு ஒரு முறை பௌர்ணமி வரும் என்று எங்களால் அறுதியிட்டு கூற முடியவில்லை.நாங்கள் உங்களிடம் கேட்கும் முதல்உதவி இதுதான். எங்கள் பௌர்ணமி எத்தனை காலத்திற்கு ஒரு முறை வரும் என்று கண்டறிந்து கூற வேண்டும். எங்களுக்கு சூரியன் இல்லாததால், நாள் என்ற கணக்கும் தெரியாது. எங்களது இரண்டாவதும் மற்றும் முக்கியமானதுமான உதவி .... " "பொறு. நான் எப்படி உங்கள் உலகத்தின் கால அளவுகளைக் கணிக்க முடியும். நீ சொல்வது போன்ற ஒரு உலகத்தை நான் இதுவரை என் தொலைநோக்கியில் கூட கண்டதில்லையே. நான் பைசா நகரத்தை விட்டு ரோமிற்கு வந்தது இந்த கோபர்நிகசுக்கு ஆதரவு தெரிவித்து, சர்ச்சின் தாகுதலில் இருந்து அவனை காப்பாற்ற மட்டுமே. நான் அவன் போல், வானவியல் அறிஞன் இல்லை. நீ வேண்டுமானால், அவனிடம் சென்று கேட்டுப் பாரேன்" என்று சொல்லி கழற்றி விடப் பார்த்தார்.

"சினோரே.. நாங்கள் உங்களைக் கண்டு கொள்ளவே மிகுந்த சிரமப் பட்டோம். நீங்கள் எங்கள் மீதக் கதைகளையும் கேளுங்கள். நிச்சயம் உங்களால் எங்களுக்கு உதவ முடியும் என்றே நம்புகிறோம்." 'இது நம்மைவிடாது' போலிருக்கிறதே என்று எண்ணிக் கொண்டார். "சரி செய்கிறேன். ஆனால் இந்த நாள் கணக்கை கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?" "நன்றி சினோரே, எங்களது இரண்டாவது உதவி என்ன என்று தெரிந்தால் இந்த கணக்கு எங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்று தெரிந்து கொள்வீர்கள். உங்கள் உலகில், வானில் நடக்கும் மாற்றங்களைக் கொண்டு உலகில் நடக்க இருக்கும் நிகழ்வுகளை கணிப்பீர்கள் அல்லவா. அதே போன்றே எங்கள் உலகிலும், இந்த நிலவுகள் வரும் காலங்களில் கொத்து கொத்தாக நாங்கள் காணாமல் போகிறோம். எனவே எங்களைப் பாதுகாக்க இந்த நிலவு வரும் காலம் எம்மவர்க்கு தெரிய வேண்டியது அவசியமாகிறது. எங்களால் நிலவு வரும் காலத்தை கணிக்கவே முடியவில்லை. குறிப்பாக, நாங்கள் நிலத்தில் இருந்து கால் விடுத்துக் கொண்ட பின், எங்கள் ஆகாயம் கலங்கி விட்டது. நிலவுகள் வருவதை எங்களால் முன்பு போல் காண முடிவதில்லை. மிதக்க ஆரம்பித்ததன் இரண்டாம் பக்க விளைவுகள் இவை. நிலவுகள் சில காலமாக, நீங்கள் இங்கு வந்த காலம் முதல் அடிக்கடி வர ஆரம்பித்துள்ள்ளன என்று எண்ணுகிறோம். இவ்வாறே சென்றால் எங்கள் வம்சம் முழுவதும் அழிந்து விடும் என்று நாங்கள் அச்சப் படுகிறோம். எங்களில் சிலர் எங்கள் பூர்விக பூமியை விடுத்தது வேறு இடம் செல்லவும் முடிவு செய்துள்ளனர். எனவே நீங்கள் .. " என்று சொல்லிக் கொண்டே சென்றது. கலிலியோவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் வான சாஸ்திரம் புரிய ஆரம்பித்தது.

கலிலியோ ரோமிற்கு வந்த நாள் முதல், இத்தாலிய சேசு சபையின், ரோபர்ட் பெல்லர்மினின் விருந்தினர் அறையில் தங்கி வருகிறார். அந்த காலங்களில், தங்கமீன் வளர்ப்பு இத்தாலியில் பிரபலம் ஆகி இருந்தது. அவர்கள் வழக்கப் படி, விருந்தினர்களின் படுக்கைக்கடியில், பளிங்கு தொட்டிகளில் மீன் வளர்ப்பார்கள். படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த கலிலியோ எழுந்து, படுக்கைக்கடியில் பாசி படிந்திருந்த மீன் தொட்டியை வெளியில் இழுத்தார். தொட்டியில் இருந்த பாசி படிந்த நீரை மாற்றி விட்டு, தங்கம், வெள்ளி மற்றும் கருமை நிறத்தில் இருந்த மீன்களை மீண்டும் தொட்டியில் விட்டார்.

1 comment:

  1. அடடா... காப்பாற்ற வேண்டுமென்று வந்தவர்களை, இப்படி அடியோடு அழித்துவிட்டாரே. பாவம் பச்சை நிற மக்கள்...

    ReplyDelete